Breaking
Sun. Nov 24th, 2024

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை சுருட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.


இதனாலேயே இனப்பிரச்சனைக்கு இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் அறிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

பிரதமர் அவரது கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க எந்தவொரு யோசனைகளையும் முன்வைக்கவில்லை.

இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையிலேயே அந்த விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அவசர அவசரமாக இந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்ய முயற்சிக்கின்றது. மறுபுறம் பல்வேறு கொள்கைகள் தொடர்பான விடயங்களை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சட்டங்களையும் நிறைவேற்றிவருகின்றது.

யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டத்தை வழங்க தயாராகியதாகவும், ஆனால் அதனை செய்துமுடிக்க முடியாததினால் மீண்டும் அதனை கொண்டுவர வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

நான்கு வருடங்களாகின்ற போதிலும் குறைந்தபட்சமாக ஒரு பிரேரணையேனும் இதற்காக சமர்பிக்கவில்லை. அந்தப் பிரச்சினை குறித்து ஆழமாக ஆராய்வதற்கும் அந்தக் கட்சியும் அரசாங்கமும் தயாரிவில்லை.

மரண தண்டனை தீர்மானங்கூட தற்போது ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் புதிதாக ஒன்றுமே இடம்பெறவில்லை. காரணம் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான மோதலாகும்.

இந்த மோதலானது உக்கிரமடைவதானது சமூகத்தையே பாதிக்கும். இன்று அந்த நிலை நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதால் நாடு வீழ்ச்சி கண்டுள்ளது.

இருவரும் என்னை தோற்கடிப்பதற்கு இணைந்த போதிலும் நாட்டை கொண்டுசெல்வதற்கான திட்டம் அவர்களிடத்தில் இருக்கவில்லை.
என்னை தோற்கடிப்பதற்கான முழு வீச்சில் அவர்கள் ஈடுபட்டதோடு அதற்கு சர்வதேசத்தின் ஆசிர்வாதமும் இருந்தது. இப்போது நாட்டை முன்கொண்டு செல்ல முடியாமல் சிறந்த தீர்வு என்றுகூறி நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர்.

துறைமுகம் சீனாவுக்கும், விமான நிலையம் இந்தியாவிற்கும் அதேபோல திருகோணமலை அமெரிக்காவிற்கும் விற்கின்றனர்.

இப்போது கப்பல் எந்த நேரத்திலும் அங்கு நங்கூரமிடுவதற்கு காத்துநிற்கிறது.

2.8 மில்லியன் அமெரிக்கப் படையினர் அதில் இருப்பதால் அனைவரும் இங்கு வரவே காத்திருக்கின்றனர்.

ஜப்பானிய பிரதிநிதி ஒருவரை சந்தித்தபோது தினமும் அங்கு சிறுமிகள் அமெரிக்க படையினரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரவிருப்பதாக அந்த பிரதிநிதி கூறினார். இதுதான் உண்மை.

அமெரிக்கப் படையினரை உள்நாட்டில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதியில்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *