நாடு பற்றி சிந்தித்து புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ. தொலவத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அரசியல் செய்யாது, நாடு பற்றி சிந்தித்து, புதிய பிரதமருக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். எப்படியான அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டை பொருளாதார பிரச்சினையில் இருந்து மீட்க நாம் புதிய பிரதமருக்கு உதவ வேண்டும்.
நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்பட்டாலும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே புதிய பிரதமருக்கு உதவ நான் நடவடிக்கை எடுப்பேன்.
ரணில் விக்ரமசிங்க செய்த விடயங்கள் தொடர்பில் எதிர்ப்புகள் இருந்தாலும் தற்போதைய சந்தர்ப்பத்தில் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தொலவத்த கூறியுள்ளார்.
அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நியாயமான காலத்தை வழங்க வேண்டும் என ஸ்ரீங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு வெளிநாடுகளுடன் தொடர்புகளை கொண்டு டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமக்கு தெரியும். நாட்டின் தற்போதைய நிலைமையில் அப்படியான உதவிகள் கிடைத்தால் நல்லது.
அவ்வாறான நலன்களையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ரணில் விக்ரமசிங்கவுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம். இது பிரதமர்களை நியமித்து, நியமித்து பதவியில் இருந்து விலக்கும் நேரமல்லது.
ரணிலுக்கு காலத்தை வழங்கி பார்ப்போம், அவர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து விரட்டுவோம் எனவும் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.