Breaking
Wed. Apr 24th, 2024

(முபாரக்)

மைத்திரி-ரணில்  அரசு எதிர்நோக்கி வரும்  சவால்களுள் மிக முக்கியமானவையாக  அரசியல் தீர்வையும்  யுத்தக் குற்ற விசாரணையையும் குறிப்பிடலாம்.இவை இரண்டும்  பெரும்பான்மை  இன  மக்களுடன் நேரடியாக தொடர்புபட்டவையாக  இருப்பதால் இவற்றைப் இராஜதந்திரரீதியில் கையாள வேண்டிய கட்டாயம்  அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இவை இரண்டும் வடக்கு-கிழக்குத் தமிழருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பவையாக இருக்கின்றபோதிலும்,இவை சிங்கள மக்களுடனும் தொடர்புபடுவதே  இந்த சிக்கல் நிலைக்குக் காரணம்.

அரசு தமிழர் சார்பில் இதுவரை தீர்த்து வைத்த சில பிரச்சினைகளை எடுத்துப் பார்த்தால் அவை எந்த வகையிலும்,சிங்கள மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை அல்ல.ஆனால்,அரசியல் தீர்வு மற்றும் யுத்தக் குற்றச்சாட்டு போன்ற விடயங்கள் அப்படியானவை அல்ல.இவை  சிங்கள மக்களுடன் பின்னிப் பிணைந்து நிற்கின்றன.

தமிழருக்கு  அதிக  அதிகாரங்களை வழங்கக்கூடியதாக அரசியல் தீர்வு அமைந்துவிட்டால் அது  தமிழீழத்தை உருவாக்கிவிடும் என்று சிங்களவர்கள் அஞ்சுகின்றனர்.இதனால் இந்த விடயம் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டியுள்ளது.அதற்காகத்தான் அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசு மக்கள் கருத்துக்களைத் திரட்டுகின்றது.

அடுத்தது யுத்தக் குற்ற விசாரணை.இது அரசியல் தீர்வைவை விடவும் சிக்கலானது.

இந்த விசாரணையின்போது இராணுவத்தினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு அவர்கள்  தண்டிக்கப்பட்டால் அது இராணுவத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமாக பார்க்கப்படும்.இராணுவத்துக்கு எதிரான அரசாக இந்த ஆரசு பார்க்கப்படும் .அது மஹிந்தவுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

இந்த அரசு  இராணுவத்தினருக்கு எதிரானது அல்ல என்று நிரூபிப்பதற்காகவே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுத்தக் குற்றம் என்ற பதத்தை நீக்கி மனித உரிமை மீறல்கள் என்று இப்போது கூறி வருகின்றார்.யுத்தத்தை வெற்றிகொண்ட படையினருக்கு தலைமை தாங்கினார் என்பதற்காக படையினர் மத்தியில் மஹிந்தவுக்கு செல்வாக்கு உண்டு என்பதை அறிந்த அரசு அந்த செல்வாக்கை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கியது.

அந்த இராஜதந்திர நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகத்தான் ஐக்கிய தேசிய கட்சி  சரத் பொன்சேகாவைத் தன்னுடன் இணைத்து அமைச்சராக்கியது.சரத் பொன்சேகாவின் ஆலோசனைப்படி மஹிந்தவுக்கு இருக்கும் செல்வாக்கைத் தகர்த்து  அரசுமீது படையினருக்கு நம்பிக்கை ஏற்படும் செயற்பாடுகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

சரத் பொன்சேகா எம்பியானதும் அவர் மஹிந்தவுக்கு எதிரான தாக்குதலை நாடாளுமன்றில் இருந்து தொடங்கினார்.புலிகளுக்கு மஹிந்த  பணம் கொடுத்தமை,யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட 2009 மே  மாதம் 19 ஆம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடக்கி வைத்தார்.அந்த ஆட்டத்தின் அடுத்த பகுதிதான் மஹிந்தவுக்கான இராணுவப் பாதுகாப்பை நீக்கி அவர்களுக்குப் பதிலாக பொலிசாரை நியமித்தமை.

மஹிந்தவின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டவர்கள் இராணுவத்தினர் என்பதால் அவர்கள் மஹிந்தவுக்கு விசுவாசமாக இருக்கக்கூடும் என்றும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அரசுக்கு எதிரான மஹிந்தவின் சதி நடவடிக்கைகளுக்கு அந்த இராணுவத்தினர் துணை போவர் என்றும் அரசு கருதியது.

இதனால்,மஹிந்தவின் அந்தரங்க- அரச எதிர்ப்பு செயற்பாடுகளை அரசால் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.ஆகவே,அரசுக்கு எதிரான மஹிந்தவின் செயற்பாடுகளை அவ்வப்போது அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப காய் நகர்த்துவதற்கு அரசின் உளவாளிகள் மஹிந்தவின் அருகில் இருப்பது அவசியமாகின்றது.அதற்கு ஏற்பவே  அரசு இராணுவத்தினரை நீக்கிவிட்டு பொலிசாரை மஹிந்தவின் பாதுகாப்புக்கு நியமித்துள்ளது.

இந்த உண்மையை மஹிந்த உணர்ந்ததால்தான் இந்த பாதுகாப்பு மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்.தனது செயற்பாடுகள் அனைத்தும் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் பொலிசாரின் ஊடாக உடனுக்குடன் அரசுக்குத் தெரிய வரும் என மஹிந்த அஞ்சுகின்றார்.

இது மஹிந்த ஆட்சியில் அவரால் பின்பற்றப்பட்ட பாதுகாப்பு முறைமைதான்.எதிர்கட்சியினரின் நடமாட்டத்தை மஹிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரிவினரின் ஊடாகத்தான் அறிந்துகொண்டார்.இதனால் அப்போது எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் முக்கியமான கூட்டங்களுக்கு பாதுகாப்பின்றியே சென்றனர்.

அந்தப் பாதுகாப்பு முறைமை இன்று மஹிந்தவையே திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளது.இராணுவத்தினர் மஹிந்தவின் செயற்பாடுகளுக்குத் துணையாக இருப்பார்கள் என அரசு ஊகித்தது சரிதன்  என்பது பின்பு தெரியவந்தது.அந்த இராணுவத்தினர் மஹிந்தவிடம் இருந்து விடை பெற்றுச் செல்லும்போது அவரது காலில் வீழ்ந்து வணங்கி-அதிக மரியாதை செலுத்திவிட்டுத்தான் சென்றனர்.

ஆகவே,அரசின் கணிப்பு சரி என்பதை அரசு பின்னர் உணர்ந்து கொண்டது.இந்தப் பாதுகாப்பு மாற்றம் பொன்சேகாவின் ஆலோசனைப்படியே செய்யப்பட்டது என்று உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்தவர் பொன்சேகாதான் என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  நாடாளுமன்றில் சொல்லாமல் சொல்லிவிட்டார்.பொன்சேகா மஹிந்தவுக்கு எதிராக மிகவும் நுட்பமாகத் காயை நகர்த்திச் செல்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

மஹிந்தவைச் சுற்றி இப்போது அரசின் கண்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன என்பதை மஹிந்த உணர்ந்துகொண்டதால்தான் அவர் இந்தப் பாதுகாப்பு மாற்றத்தை எதிர்க்கின்றார்;நாடாளுமன்றில் தனது ஆட்களை விட்டு கலவரத்தை ஏற்படுத்தினார்.

ஆனால்,மஹிந்தவின் இந்தக் காடைத்தனம் தொடர்ந்தும் பிரதமர் ரணிலின் இராஜதந்திரத்துடன் போட்டியிட்டுத் தோற்கப் போவது நிச்சயமே.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *