(Nadesan Kugatharsan)
யுத்தத்துக்குப் பின்னர் சிவில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் காட்சிக் கலையரங்க அமர்வு (Forum Theater) ஓட்டமாவடியிலுள்ள மேற்கு பிரதேசசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
இது தொடர்பில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் (Eastern Social Development Foundation) தன்னார்வ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.புஹாரி முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இள வயதுத் திருமணம், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள், காணி, மொழிப் பிரச்சினைகள் குறிப்பாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதற்காகவே இந்த காட்சிக் கலையரங்க அமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
போகஸ் வுமென் அனுசரணையில் இடம்பெற்ற இவ் அமர்வில், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ்.ஸ்ரீரஞ்சனி பிரதான வளவாளராகக் கலந்து கொண்டார்.
அத்தோடு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸ் உள்ளிட்ட அரச சேவையாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களான கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரச்சினைகள் தேசிய மட்டத்தில் தெளிவு படுத்தப்படவேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதுமே திட்டத்தின் இலக்காகவுள்ளமை குறிப்படத்தக்கது.