யாழில் மகன் வீட்டுக்கு வரவில்லை என்ற மன விரக்தியில் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தங்கராசா கோதைநாயகி (வயது 82) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கணவன் இறந்த பின்னர் குறித்த மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். மகன் ஒருவர் தினமும் மாலை வேளையில் தாயின் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு காலையில் தனது வீடு செல்வது வழமை. இந்நிலையில் வியாழக்கிழமை (20) அந்த மகனுக்கும் தாய்க்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் மகன் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் மன விரக்தியடைந்த குறித்த தாய் வெள்ளிக்கிழமை (21) தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (21) இரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.