இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கோரியுள்ளது.
இலங்கையின் அரசால் நடத்தப்படும் விமான நிலைய முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது.
எனினும், கொழும்பு விமான தகவல் பிராந்தியத்திற்கு அருகாமையில் விமான நிலையங்கள் காணப்படும் இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்படவில்லை. போட்டித்தன்மை காரணமாக இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனமானது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து விலை மனுக்களை கோரியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரையில் விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமான நிலையக் கட்டிடத்தை கட்டி முடிக்கும் இந்த திட்டமானது, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட உள்ளது. பிரதான முனைய கட்டிடம், உயரமான சாலை போன்ற உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜனவரி 29ம் திகதியன்று முடிவடைகிறது.