முஸ்லிம் காங்கிரசின் தலைமயகமான “தாருஸ்ஸலாம்” யாரின் பொறுப்பில் உள்ளது என்று ஒரு பொறுப்புள்ள மூத்த ஊடகவியலாளரான மதிப்பிற்குரிய மீரா எஸ் இஸ்ஸதீன் அவர்களால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இவரது இல்லத்துக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் சென்றுவந்த பின்பு “”மஞ்சள் கவர்” என்ற சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த நிலையிலேயே மீரா இஸ்ஸதீன் அவர்களின் பல கேள்விகளுடன் தலைவருக்கான கடிதமும், அதன் பின்னணி பற்றியும் சந்தேகங்கள் எழுகின்றது.
இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரசில் அங்கத்தவராக இருந்தபோது இவ்வாறான கேள்வி கேற்பதற்கு உரிமைகள் இருந்தும் மௌனியாக இருந்துவிட்டு, இப்போது இவ்வாறான கேள்வி கேற்க எந்தவித அருகதையும் அற்ற நிலையில், திடீரென இக்கேள்வி எழுவதுக்குரிய அவசியம் என்ன?
இதனை பின்னால் இருந்துகொண்டு தூண்டும் சக்திகள் யார்? என்ற கேள்விகள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மத்தியில் எழுகின்றது.
மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மரணிக்க முன்பே முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாத்துக்கென நம்பிக்கை நிதியம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். அத்துடன் முஸ்லிம் காங்கிரசில் அங்கத்துவம் வகிக்காத எவரும் இச்சொத்துக்கு உரிமைகளோ, பொறுப்புக்களோ கோர முடியாது என்றும் தெளிவாக சட்டம் இயற்றியுள்ளார்.
அமான் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரசில் அங்கத்தவராக இல்லாத நிலையில் இச்சொத்துக்கு பங்குதாரராக அவரை எவ்வாறு இணைத்துக்கொள்ள முடியும்? அத்துடன் தலைவர் அஷ்ரப் மறைந்து பதினைந்து வருடங்கள் கழிந்தும் இவ்வளவு காலமும் இல்லாத அக்கறையும், பாசமும் அமான் அஷ்ரப் மீது திடீரென இப்போது மூத்த ஊடகவியலாளருக்கு உருவானதன் மர்மம் என்ன?
முஸ்லிம் காங்கிரசின் ஏனைய அங்கத்தவர்களைவிட தலைவர் ரவுப் ஹக்கீம் மீதே கட்சி போராளிகள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவரைவிட நம்பிக்கையானவர்கள் இக்கட்சியில் யாரும் இருக்க முடியாது. தலைவர் அஷ்ரபின் மரணத்துக்கு பின்பு தலைவர் ரவுப் ஹக்கீமினாலேயே இந்த கட்சி இவ்வளவு தூரம் கட்டிக்காக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தாருஸ்ஸலாம் தலைவரின் குடும்பச்சொத்தாக மாறிவிடும் வாய்ப்புள்ளது என்று தனது அபாண்டமான கருத்தினை கூறிவிட்டு அதனை போராளிகள் மேல் பழியை போட்டுள்ளார். ஆனால் யார் அந்த போராளிகள் என்று ஏன் கூறவில்லை?
முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக பதவியேற்று பதினைந்து வருடங்கள் கடந்தும் இதுவரையில் தாருஸ்ஸலாமில் தலைவரோ, அவரது குடும்பத்தினரோ குடியிருக்கவுமில்லை. சொந்தம் கொண்டாடவுமில்லை. பொறுப்புள்ள ஊடகவியலாளரின் கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடே இது என போராளிகளினால் கருதக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற பேராளர் மாநாட்டில் ஆயிரக்கணக்கான பேராளர்கள் முன்பாக வருடாந்த கணக்கறிக்கைகள் பொருளாளரினால் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அந்த கணக்கரிக்கையில் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கின்ற வருமானமும், செலவுகளும் விபரமாக பேராளர்கள் முன்பாக கூறப்படும். அதில் தாருஸ்ஸலாம் மூலம் கிடைக்கின்ற வருமானமும் அறிக்கையிடப்படுவது சாதாரண ஒரு விடயமாகும்.
இந்த நடைமுறையை அறிந்திராத மூத்த ஊடகவியலாளர் ஏதோ முடிச்சு போடப்பட்டுள்ளதாகவும், அது அவிழ்க்கபட வேண்டுமென்றும் கதை சொல்லுகின்றார். இவர் யாரை திருப்தி படுத்துவதற்காக கதை சொல்லுகின்றார் என்பது நாங்கள் அறியாத விடயமல்ல.
தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விரோதமானவன் என்று காண்பிப்பதன் மூலம் அதன் எதிரிகளிடம் இருந்து பல சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு நாடகமாடுகின்றாரா?
கடந்த மாதம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த மாநாடு நிந்தவூரில் நடைபெற்றது. இம்மாநாட்டினை நடாத்துவதற்கு தலைவர் ரவுப் ஹக்கீமிடம் பணம் கோரிய போது, தனது கையினால் சுளையாக நாலு இலட்சம் ரூபாய்கள் பணமாக இந்த மூத்த ஊடகவியலாளரின் கையில் தலைவர் ரவுப் ஹக்கீமினால் வழங்கப்பட்டது.
இந்த பணத்தினை தலைவர் ஹக்கீம் அவர்களினால் எந்த அடிப்படையில் செலவாக பதிவிடுவது? இவ்வாறு பணத்தினை கோரியபோது தாருஸ்ஸலாமின் முடிச்சினையும் அவிழ்க்க சொல்லியிருக்கலாமே. ஏன் அப்போது முடிச்சினை அவிழ்க்க சொல்லவில்லை? அப்போது இந்த முடிச்சு இருக்கவில்லையா?
அத்துடன் கட்சியில் முதுகெலும்புள்ள சிரேஷ்ட போராளிகளை தலைவர் விரட்டுவதாக அபாண்டம் ஒன்றினை கூறியிருக்கின்றார். தலைவர் ஹக்கீம் அவர்கள் தலைமை ஏற்றதிலிருந்து இவர் கூறியது போன்று விரட்டப்பட்ட ஒருவரின் பெயரை குறிப்பிட்டு கூற முடியுமா?
கட்சியில் இருந்துகொண்டு கட்சி தலைமைக்கும், கட்சிக்கும் துரோகம் செய்துகொண்டு பதவிக்காக பேரினவாதிகளிடம் சோரம்போய் கட்சியை விட்டு வெளியேறி சென்றார்களே தவிர, யாரையும் தலைவர் கட்சியை விட்டு விலக்கியதில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தனிநபரின் கட்சியல்ல. ஒரு முழு கட்டமைப்புள்ள ஜனநாயகரீதியில் இயங்குகின்ற ஒரு அரசியல் கட்சியாகும். இது பல சோதனைகளை எதிர்கொண்ட போது போராளிகளினால் கட்டிக்காக்கப்பட்டது. மாறாக இப்படிப்பட்ட மூத்த ஊடகவியலாளரினால் அல்ல.
இக்கட்சிக்காக நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் மத்திய குழுக்கள் இருக்கின்றது. அத்துடன் மாவட்ட குழுக்களும், அதியுயர்பீடமும் உள்ளது.
எனவே முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு முடிச்சுக்கள் விழுகின்றபோது அதனை எவ்வாறு அவிழ்ப்பது என்று இக்கட்சியில் உள்ள கட்டமைப்பினருக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
தனக்கு அரசியல் ரீதியில் தேவைகள் இருக்கும்போது அதற்கு மூத்த ஊடகவியலாளர் வேறு வழிகளை தேடிக்கொள்வது நல்லது. தலைவர் மீதும், கட்சியின் மீதும் வீண் பழிகளை போட்டு அதன் மூலம் இலாபம் தேட முற்படுவது ஆரோக்கியமானதல்ல.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது