தேசிய அரசாங்கத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் தருணத்தில் அதனை சீர்குலைத்து எமது கட்சியின்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படும் பிரிவினர் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பொறுமையாக இருக்க முடியாது. எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது என்று அமைச்சர் கபிர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தேசிய அரசாங்கத்தின் ஒருமித்த செயற்பாடுகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்துவருவதோடு யானையின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொறுமையாக இருந்துள்ளோம். எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தேசிய அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த பயணத்தை எவராலும்தடுத்து நிறுத்த முடியாது என்றார்.