தமிழர்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றிய அருட்தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸின் பிரிவு ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பெரும் இழப்பாக மாறியுள்ளது.
இந்த நிலையில் அருட்தந்தையை ஒரு முறை மாத்திரமே சந்தித்த மௌலவி இல்யாஸின் செயல் இலங்கையிலுள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மௌலவி கடந்த 21ஆம் திகதி தன் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு புனித மரியாள் பேராலயத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது அருட் தந்தையின் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படுவதை கண்டு அதில் தாமும் கலந்து கொண்டு பிரேத பெட்டியை சுமந்திருக்கிறார்.
இதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓஸானம் (விசேட தேவையுடைய குழந்தைகளை பராமரிக்கும் இடம்) நிலையத்திற்கு நேரடியாக மௌலவி ஏ.ஜே.எம்.இயாஸ் சென்று அருட் தந்தையின் பிரிவினால் வாடும் அங்குள்ள குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அத்துடன், அருட்தந்தையை பாம்பு தீண்டிய இடத்தினையும் பார்வையிட்டிருந்தார். (மின்சார கம்பத்திற்கு அருகில் அருட் தந்தை நின்று கொண்டிருந்த போது அந்த கம்பத்தில் இருந்த பாம்பொன்றே அருட் தந்தையை தீண்டியிருந்தது.)
இன, மத, மொழி பேதங்கள் கடந்து அருட் தந்தையின் இழப்பானது பலரது மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் அருட்தந்தை பாம்புக்கடிக்கு இலக்காகி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் பெரும் திரளான மக்களின் ஒன்று கூடலுடனும், ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீரோடும் அருட்தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை இந்த சம்பவமானது இன, மத, பேதங்களை கடந்த மனிதம் இந்த உலகில் காணப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.