குஜராத்தில் நடந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 3 உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இவை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகின்றன.
முதல் உலக சாதனை
பிரதமர் நரேந்திர மோடியின் 66–வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் சிறப்பாக நடைபெற்றன.
நேற்று முன்தினம் தெற்கு குஜராத்தில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் தொடங்கிய பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 30 வினாடிகளில் 1,002 குழந்தைகள் அகல் விளக்கு ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் 989 பேர் 30 வினாடிகளில் அகல் விளக்கு ஏற்றினர். இது முதல் உலக சாதனை ஆகும்.
2–வது, 3–வது உலக சாதனை
நேற்று அங்கு நடந்த விழாவின்போது 1,000 மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து, ‘‘ஹேப்பி பெர்த் டே பி.எம்.’’ என்ற வார்த்தைகளின் வடிவமைப்பில் அணிவகுத்துக் காட்டினர். இதுவும் ஒரு உலக சாதனை ஆகும்.
அடுத்து காது கேட்கும் திறனற்ற 1,700 பேருக்கு 3,400 காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன. இதுவும் உலக சாதனைதான்.
கின்னஸ் புத்தகத்தில் இடம்
இந்த விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில்தான் 2–வது மற்றும் 3–வது சாதனைகள் படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சாதனைகள் குறித்து விழாவில் பேசிய மத்திய மந்திரி தவர் சந்த் கெல்லாட் குறிப்பிட்டார்.
அப்போது அவர், ‘‘நாம் 3 சாதனைகளை இங்கே முறியடித்திருக்கிறோம். இந்த சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் நடத்திக் காட்டப்பட்டுள்ளன’’ என குறிப்பிட்டார். எனவே இந்த 3 சாதனைகளும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றன.