Breaking
Mon. Nov 25th, 2024

(சுஐப் எம்.காசிம்)    

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்தத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதியளித்தார்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, நாளை பாராளுமன்றத்தில் உரிய அமைச்சர்களைச் சந்தித்து காத்திரமான முடிவுகளை மேற்கொள்வோம் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டி தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட, வீடுகளை இழந்து இதுவரை வீடுகள் கிடைக்காத மக்கள் நேற்று (19/09/2016) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்களுடன் நேரில் பேசிய அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு உறுதிமொழியை வழங்கினார்.

அமைச்சருடன் எம்.பிக்களான டாக்டர் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ் கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், மஸ்தான் ஆகியோரும் உடனிருந்தனர். எம்.பிக்களும் தமது கருத்தை அங்கு தெரிவித்தனர்.

“யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு மக்களே. போரின் உக்கிரத்தினால் நாங்கள் வாழ்விழந்து, வீடிழந்து, உறவிழந்து தவிக்கின்றோம். அரசாங்கத்தின் வீட்டுத்திட்டதில் எங்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  புள்ளித்திட்டம் என்ற போர்வையில் அதிகாரிகள், எங்களுக்கு வீடு தர மறுக்கின்றார்கள். தனி நபர்களுக்கும் வீடில்லை. கணவன், மனைவி இருவர் மட்டுமே வாழும் குடும்பத்தில் பிள்ளைகள் எங்கே என்று கேட்கின்றனர். பிள்ளைகள் இல்லாத வயோதிபக் குடும்பங்கள் குழந்தைகளுக்கு எங்கே போவது? நாங்கள் இருக்க இடமில்லாமல் தவிக்கின்றோம். யுத்தம் முடிந்து இத்தனை காலம் இல்லிடமின்றி அவதிப்படுகின்றோம். நாங்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதற்கு, நிம்மதியாக உறங்குவதற்கு ஒரு வீட்டைத் தாருங்கள் என்றே  கேட்கின்றோம். எனவே, எங்களுக்கு உதவுங்கள்” என்று அவர்கள் வன்னிமாவட்ட பிரதிநிதிகளிடம் உருக்கமாக வேண்டினர்.

பின்னர் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைப் பெற்றுக்கொண்ட வன்னிமாவட்ட மக்கள் பிரதிநிதிகள், இந்தக் கோரிக்கையின் நியாயத்தன்மையை தாங்கள் உணர்ந்துகொண்டதாகவும், இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதன் பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை எடுத்துக்கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீனும், டாக்டர். சிவமோகன் எம்.பியும், வீடில்லாத மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், தீர்க்கமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென கூறினர்.

அமைச்சர் றிசாத் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

வீடுகளை வழங்குவதற்கான புள்ளியிடல் திட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கு தளர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 65௦௦௦ வீட்டுத் திட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கென ஒதுக்கப்பட்ட வீடுகள் போதாது எனவும், இந்த மக்கள் படும் கஷ்டங்கள் வேதனையானது எனவும் கூறினார். வீட்டுத் திட்டத்தில் மத்திய அரசு ஒரு முடிவும், மாகாணசபை இன்னொரு முடிவும், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேறொரு முடிவும் மேற்கொள்ளப்படுவதன் மூலம், இந்தப் பிரச்சினையை இன்னும் சில வருடங்களுக்கு இழுத்தடிப்பதாகவே முடியும்.unnamed-8

எனவே, மூன்று சாராரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இங்கு உணர்த்தினார். ஆகவே, நாளை மறுதினம் புதன்கிழமை மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனை, வன்னிமாவட்ட எம்.பிக்கள் ஆகிய நாங்கள் சந்திப்போம் எனவும், இந்தப் பிரச்சினையை அவருக்கு விளக்கி, உரிய பரிகாரத்தை மேற்கொள்வோம் எனவும் கூறினார்.unnamed-6

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் ஏகமனதான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.    unnamed-5

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *