மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி காரணமாக நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு ஈடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாமாக முன்வந்து பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அல்லது, ஜனாதிபதியே பிரதமரிடம் பதவி துறப்பு கடிதத்தை கோர வேண்டும் என முன்னாள் வெளிநாட்டு இராஜதந்தி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி குறித்து ஜனாதிபதி நேற்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள நிலையில், கலாநிதி தயான் ஜயதிலக்க இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடிகளுக்கும், அநீதிக்கும் எதிர்ப்பு தெரிவத்து பொது மக்கள் வீதியில் இறங்க வேண்டும்.
நாட்டின் முக்கிய நிறுவனம் ஒன்றின் தலைவர், அந்த நிறுவனத்தின் மிக முக்கியமான இரகசியங்களை தனது உறவினர்களுக்கு தெரிவத்து இலாபமீட்ட காரணமாக இருந்துள்ளார். இதற்கு முன்னாள் நிதி அமைச்சரும் ஆதரவாக இருந்துள்ளார்.
நாட்டிலுள்ள பிரதான நிதி நிறுவனமொன்றுக்கு இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக உலகில் எந்தவொரு நாட்டிலும் தான் கேள்விப்பட்டதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 30ஆம் திகதி தனது விசாரணை அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.
குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் நேற்றைய தினம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த ஜனாதிபதி, மோசடி குறித்து சட்டநடவடிக்கை எடுப்பதற்கு பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.