Breaking
Sun. Nov 24th, 2024

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி 150 ஆசனங்களைப் பெறுவது உறுதியாகும். ரணில், சஜித் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டால் தேர்தலில் எமக்குப் போட்டியாக யாரும் இல்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி 150 ஆசனங்களைப் பெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகும்.


எமக்குப் போட்டியாக இன்று யாரும் இல்லை. எமக்குச் சவாலாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டிருக்கின்றது. அதனால் தேர்தலில் எமக்குப் போட்டியில்லை. எங்களுக்குள்ளேயே போட்டி ஏற்படும்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முரண்பாடுகளினால் தேர்தலில் இன்னும் எமக்குச் சாதகமான நிலைமை ஏற்படலாம்.


இவர்களின் முரண்பாட்டால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். அதனால் கிராமப்புறங்களில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்.


ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தையே முன்னுக்குக் கொண்டு செல்ல இருக்கின்றோம்.
அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை இன்னும் விரிவாக்கம் செய்து விரைவில் வெளியிடுவோம். தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதே எமது பிரதான கொள்கையாகும்.


மேலும், தேர்தலில் நாங்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததுடன் மேற்கொள்ள வேண்டிய விடயங்களில் பிரதானமாக அரசமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டமாகும்.


தற்போது இருக்கும் அரசமைப்பை முற்றாக நீக்கிவிட்டு புதிய அரசமைப்பைத் தயாரிக்கவேண்டும். அதில் தற்போது இருக்கும் தேர்தல் முறைமையை முற்றாக இல்லாமலாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *