துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
அ.இ.ம.கா தலைவர் மிக நீண்ட நாள் தடுத்து வைப்பின் பிறகு விடுதலையாகி உள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் பல விடயங்கள் நடந்தேறியிருந்தன. அ.இ.ம.கா கட்சியினுள் எம்.பிக்கள் மொட்டு பக்கமும், ஏனையோர் அதற்கு எதிரான பக்கமும் நின்றதை அவதானிக்க முடிந்தது. ஒவ்வொருவரும் தங்களது பக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் பல விதமான கருத்துக்களை கூறியிருந்தனர். சிலர் தங்களது சுயநலத்துக்காக அ.இ.ம.கா தலைமையை அடமானம் வைக்கவும் துணிந்திருந்தனர். தற்போது அ.இ.ம.கா தலைமை வெளியில் உள்ளது. இனியும் குருட்டுத்தனமான நியாயங்களை யாருமே முன் வைக்க முடியாது.
அ.இ.ம.காவின் மூன்று எம்.பிகளில் இருவர் பூரணமாக மொட்டு சார்பு கொள்கையில் உள்ளனர். அவர்கள் தங்களை அவ்வாறே வெளிப்படுத்துகின்றனர். முஷர்ரப் எம்.பியின் நிலைப்பாடு, மொட்டு அணியினரிடம் மொட்டுவாகவும், அ.இ.ம.கா அணியினரிடம் மயிலாகவும் உள்ளது. அ.இ.ம.கா தலைவர் வெளியில் வந்த பிறகு, பா.உறுப்பினர் முஷர்ரபுடைய செயற்பாடு எவ்வாறு அமையப்போகிறது என்பது பலரும் எதிர்பார்த்த ஒரு விடயமாக இருந்தது. தற்போதும் அவருடைய நிலைப்பாடு இரட்டை வேடமானதாகவே உள்ளது. அவருடைய நிலையில் சிறிய மாற்றமிருப்பதாக கூட தெரியவில்லை.
பா.உறுப்பினர் முஷர்ரப் மொட்டு அணியிடம் மிக நெருங்கமான தொடர்பில் உள்ளார். இன்னும் சொல்லப் போனால் அதனை விட்டும் விலக முடியாதளவு அவரை சில விடயங்கள் பிணைத்து வைத்துள்ளன ( எதிர்வரும் காலங்களில் அவை பற்றி எழுதலாம் என்றுள்ளேன் ) என கூறலாம். அவர் எதற்காகவும் மொட்டை விட்டு விலகும் நிலையில் இல்லை. அப்படியானல், அ.இ.ம.காவை விட்டு விலகுவாரா என கேட்கலாம். அதனை விட்டும் விலக மாட்டார். அ.இ.ம.காவை விட்டு விலகினால் அவரால் மீண்டும் பாராளுமன்றம் நுழைய முடியாமலாகிவிடும் என்பதை அவர் நன்கறிவார். அ.இ.ம.காவில் இருந்து கொண்டு, மொட்டுவுடனான உறவையும் தொடர விரும்புகிறார். இதுவே அவருடைய தற்போதைய நிலைப்பாடு என சுருக்கமாக குறிப்பிடலாம்.
இவ் இரட்டை தோணி நிலைப்பாட்டை அவரால் நீண்ட காலம் தொடர முடியாது. வேண்டுமென்றால் சிறிது தூரம் பயணிக்கலாம். பா.உறுப்பினர் முஷர்ரபின் நிலையை பலரும் முன் கூட்டியே அறிந்திருப்பதால், அதற்கு அ.இ.ம.காவினர் தயாராகாமலா இருப்பார்கள். முஸ்லிம்களின் அதி உச்ச வெறுப்பை சம்பாதித்துள்ள மொட்டோடு இணைந்து, தனது அரசியலை முன்னெடுக்க முனையும் பா.உறுப்பினர் முஷர்ரபை பூச்சியமாக்குவதொன்றும் பெரிய விடயமாக இருக்காது. கடந்த காலங்களில் இது போன்றதொரு நிலைப்பாட்டை எடுத்த ஒருவரை பூச்சியமாக்கிய வரலாறும் அ.இ.ம.காவிடம் உள்ளது என்பதையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.