Breaking
Thu. Nov 21st, 2024

ஜனாதிபதி மைத்திரியிடம் இருந்து இரண்டொரு தினங்களில் முக்கிய அறிவிப்பு வெளிவரவுள்ளது. தூய அரசை அமைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு இருக்கும் என்று அவரே தெரிவித்துள்ளார்.

தூய்மையான அரசை அமைக்கும் போராட்டத்தில், எந்தக் கட்சி, எந்த வர்ணம், எந்த நபர் வெட்டுப்படப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இந்தப் போராட்டத்தின் மூலமாக தூய்மையான அரசை அமைப்பதே எனது நோக்கம் என்று மேலும் தெரிவித்துள்ளார் அவர்.
மைத்திரியின் இந்த அறிவிப்பு அல்லது அது தொடர்பான நகர்வுகள் ஏன் அரசியல் காய் நகர்த்தல்களாக இருக்கக் கூடாது என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.

ஏனென்றால் உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து களமிறங்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அங்கு வைத்தே மைத்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மைத்திரி உரையாற்றிய இடம் மற்றும் அந்த இடத்தில் இருந்த நபர்கள், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு தேர்தல் நகர்வுக்கான அத்திபாரம் என்ற பலமான சந்தேகம் மனதில் வலுவாகவே நிலைபெறுகிறது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பிலான இறுதி அறிக்கை நாளை வெளிவரவுள்ள நிலையிலும் அரச தலைவரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது.

எவரெவர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டாலும் அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தான் தயாராக உள்ளமையையும் அவர் வெளிப்படுத்தியிருக்கலாம்.
அதேநேரம் பிணைமுறி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க, விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதும் தான் குற்றவாளி அல்லர் என்பது தெளிவாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஊடகங்கள் என்னை வித்தைக்காரனாகப் பயன்படுத்தியிருந்தன. ஜனாதிபதியிடம் இந்த அறிக்கை வழங்கப்பட்டதும் உண்மை வெளிப்படும் என்று காட்டமாக தனது நிலைப்பாட்டை எடுத்தியம்பியுள்ளார் ரவி கருணாநாயக்க.
ரவியின் கருத்து உண்மையெனின் பிணைமுறி மோசடி தொடர்பிலான குற்றவாளி எவர். அந்த முக்கியப் புள்ளியைக் கருத்தில் கொண்டுதான் தூய அரசு என்ற அறிவிப்பை மைத்திரி வெளிப்படுத்தியுள்ளாரோ எனறும் எண்ணத் தோன்றுகிறது.

ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர்.எனவே இந்த வழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலருக்குத் தொடர்பு இருக்கலாம். அனைத்துக்கும் பொறுப்பேற்று அந்தக் கட்சியின் தலைவரான ரணில் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இதையே தூய அரசு என்று தனது சகாக்கள் மத்தியில் மைத்திரி குறிப்பிட்டிருக்கலாம்.
இலங்கை அரசியலில் மிகப்பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் வெகுதூரத்தில் இல்லை.

ஒன்றை மட்டும் அரச தலைவர் ஏற்றுக் கொள்கிறார் ‘நல்லாட்சி’ என்று கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரி – ரணில் கூட்டு அரசு, தூய அரசாக இல்லை என்பதே அது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *