ஜனாதிபதித் தேர்தலின்போது எந்தக் கட்சியிலிருந்து வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார் என்பதை ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அவர்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் உள்ளிட்ட முஸ்லிம், தமிழ், மலையக் கட்சிகளின் கூட்டணியுடன் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தலின்போது எந்தக் கட்சியிலிருந்து வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார் என்பதை ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தான் தீர்மானிக்க வேண்டும்.
இதுதொடர்பில் அவர்களுக்குள் சிறந்த புரிந்துணர்வொன்று ஏற்பட்டுள்ளது. நாமும் ஆவலுடன்தான் இருக்கிறோம். இதனை இப்போதே கூறுவது சரியல்ல.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார்.
தற்போது, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. இதனால், அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையாலேயே நாம் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
இந்த புதுவருடத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் அபிப்பிராயத்தை தெரிந்துக்கொண்டுள்ள வேண்டும். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என சந்திரிக்கா அம்மையார் கூறியுள்ளார்.
ஆனால், அவ்வாறு இணைந்தால் சமஷ்டி அரசியமைப்பு, நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பது, வங்கிகளை தனியார் மயமாக்குவது என அனைத்துக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தலையாட்ட வேண்டியேற்படும்.
அதற்கு அவர்கள் இணங்கினால், தாராளமாக இணையலாம். இதற்கு நாம் எப்போதும் எதிர்ப்பினை வெளியிட மாட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும் எம்முடன் இணைந்து செயற்பட தயாராகவே இருக்கிறார்கள் என்றார்.