ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘தாமரை மொட்டுச் சின்னத்துக்குள் மறைந்து நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோாம். நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள் இன்று நல்லவர்கள் போல் இருக்கின்றனர் என சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பியகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி 2015இல் ஆட்சிக்கு வந்த அரசு நாட்டை இழித்திருந்தது. மத்திய வங்கியைக் கொள்ளையடித்தார்கள். ராஜபக்ச குடும்பத்தை சிறையிலடைத்தார்கள். தேரர்கள், இராணுவத்தினர், அரச ஊழியர்களைப் பழிவாங்கினார்கள். நாட்டின் பொருளாதாரத்தை இல்லாமல் ஆக்கினார்கள்.
தோற்கடித்த தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தலைதூக்க இடமளித்தார்கள். அதன் விளைவாகவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் தப்பியிருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில் இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் இணையத்தளங்கள் குறிவைக்கப்பட்டன.
இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளை நாட்டிலும் சர்வதேசத்திலும் போஷித்த நல்லாட்சி அரசில் இருந்தவர்கள் இன்று சுத்தவாளிகள் போல் இருக்கின்றனர்.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் இந்தியப் புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்திருந்தது. கடந்த அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இதனை அறிந்திருந்தனர். பொலிஸ்மா அதிபர்கூட அறிந்திருந்தார். ஆனால், அதனைத் தடுப்பதற்கு அரசின் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? நல்லாட்சி அரசின்பால் நாட்டுக்குத் தீங்கு இழைத்த எந்த அரசும் இலங்கை வரலாற்றில் இல்லை.
மேலும் அன்று நாங்கள் ‘தாமரை மொட்டு’க் கட்சியை உருவாக்கும்போது எம்மை வீதி பூராகவும் அழைய விடுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆனால், அவ்வாறு தெரிவித்த அவர் இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்ல ‘தாமரை மொட்டுச் சின்னத்திலே போட்டியிடுகின்றார்.
நல்லாட்சி அரசில் இரண்டு பக்கத்துக்கு இழுத்துக்கொண்டிருந்த ஜனாதிபதி, பிரதமரே இருந்தனர். இதுதான் உண்மை. மைத்திரிபால சிறிசேன இப்போது எதனையும் செய்ய முடியாத நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வேலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என அவர் பிரசாரம் செய்து திரிகின்றார். மைத்திரிபால சிறிசேன ‘தாமரை மொட்டு’ச் சின்னத்தில் மறைந்து எப்படியாவது நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயற்சிக்கின்றார். அவரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகவும் அவதானத்துடனே இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.