எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ள சாதகமான பதில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களுக்கு விடிவாக அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
நில மீட்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மறிச்சுக்கட்டி மக்களை சந்தித்து அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் றிசாத் பதியுதீனோடு இணைந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் பணித்திருந்தார்.
இதனையடுத்து மஸ்தான் எம்.பியினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபாண்மை மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளாலும் உருவாக்கப்பட்ட நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதியோ அல்லது சிறுபாண்மை மக்களுக்கு அநீதி இழைப்பவரோ அல்ல. மாறாக இந்த வில்பத்து விவகாரத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதிக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றமையே உண்மை.
குறித்த விடையத்தில் ஜனாதிபதி அரசியல்வாதிகளுக்கு முதல் சம்பவம் தொடர்பில் அங்குள்ள சிவில் சமூக அமைப்புக்களையே சந்திக்க விரும்பினார் அதனடிப்படையில் அண்மையில் அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் சார்பிலும் சிலர் ஜனாதிபதியை சந்தித்ததன் விளைவாக எதிர் வரும் 13ம் திகதி சாதகமான பதிலொன்றை தருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அப்போராட்டத்தை கைவிடுமாறும் கூறியிருந்தார்.
அதனடிப்படையில் எதிர்வரக்கூடிய 13ம் திகதி மறிச்சுக்கட்டி மக்களின் விடியலுக்கான நாளாக இருக்க வேண்டும் என்பதுடன், மீண்டும் தமது சொந்த நிலத்தில் அந்த மக்கள் சுதந்திரமாக வாழ ஜனாதிபதி வழிசமைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
அத்துடன் சிறுபாண்மை மக்களின் ஜனநாயகத்தை உருத்திப்படுத்தி நல்லாட்சியை பலப்படுத்த கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக ஜனாதிபதி பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மஸ்தான் எம்.பியினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.