Breaking
Mon. Nov 25th, 2024

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

“மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கௌரவிக்கக் கூடிய வேலைத் திட்டங்களை நாங்கள் நிச்சயமாக கூடிய விரைவில் முன்னெடுப்போம்” என மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் தெரிவித்தார்.

கல்லொலுவை, மினுவாங்கொடை வஸீலா எழுதிய,  உலக பல்கலைக்கழக (அமெரிக்க) விருது பெற்ற ‘மொழியின் மரணம்’ சிறுகதைதொகுதியின் அறிமுக விழா நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை காலை நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஷாபி ரஹீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வட மாகாண, கிழக்கு மாகாண அனைத்து  எழுத்தாளர்களுக்கும் அரச மட்டத்தில் விருது வழங்கி , நினைவுபடுத்துகிறார்கள், அவர்களைக் கௌரவிக்கிறார்கள். ஆனால் மேல் மாகாணத்தில் இதுவரையும் ஒரு முஸ்லிம் எழுத்தாளருக்கும் விருது வழங்கவுமில்லை, அவர்களைக்  கௌரவிக்கவுமில்லை. எனவே மேல் மாகாணத்தில் வாழுகின்ற  முஸ்லிம் இலக்கியவாதிகள் கௌவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களின் ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம் தனதுரையின் போது மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமிடம் முன்வைத்தார். அதற்கு பதிலளித்துப் பேசுகையிலே ஷாபி ரஹீம் இந்த வாக்குறுதியை வழங்கினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“முஸ்லிம் எழுத்தாளர்களை கௌரவிப்பதற்குத் தேவையான பண ஒதுக்கீடுகளைச் செய்து மேலும் புதிய எழுத்தாளர்களை இப்பிரதேசத்திலிருந்து உருவாக்கி ஊருக்கும் முழு இலங்கைக்கும் சேவை செய்யக் கூடிய அளவுக்கு உங்களுடன் நானும் இணைந்து செயற்படுவேன் என்ற உறுதி மொழியையும் சொல்லிக் கொள்ள விரும்கிறேன்” என்றும் மேலும் தெரிவித்தார்.

அல் -ஹிலால்  மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.எம். இர்ஷாத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,  முதல் பிரதியை நூலாசிரியர் வஸீலாவின் மருமகனின் தாயார் நூர்ஜஹான் பெற்றுக் கொண்டார்,

முகர்ரமா சர்வதேச பாடசாலை மற்றும் அல் – ஹிலால் மத்திய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய பூவரசி பதிப்பகத்தின் பணிப்பாளர், எழுத்தாளர் ஈழவாணி, கலாபூஷணம் மு.பஷீர், லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களின் ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம், காவ்யாபிமானி கலைவாதி கலீல், நவமணிப் பத்திரிகையின் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஸாகிர், கிண்ணியா அமீர்அலி, ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஏ.எம். தாஜ், தினகரன் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஏ.ஜி.எம். தௌபீக், அறிவிப்பாளர் சாமிலா மற்றும் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள்,  ஊர்ப்பிரமுகர்கள், நூலாசிரியரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கிண்ணியா அமீரலி, பாத்திமா ஸம்ருத் ஸரூக், தினோஸா காயத்திரி, ஷெரீன் பானு, ரஜுலா உவைஸ் போன்றோர்களால்  கவிதைப் பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டதோடு, றினோஷா றிபாய்ஸால் பாடல் ஒன்றும் பாடப்பட்டது.

நிகழ்வை வசந்தம் எப்.எம். அறிவிப்பாளர் ஏ. எம். அஸ்கர் தொகுத்து வழங்கினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *