கட்டுரைகள்பிரதான செய்திகள்

“மேலாதிக்க தலையீடுகளை அடியோடு நிராகரிக்கும் அரசு”; ஜெனீவாவை நம்புவோர் நிலை என்ன?

– சுஐப் எம்.காசிம்-

“சாண் ஏற முழம் சறுக்கும்” என்ற கதை, ஜெனீவாவை நம்பிக் காய்களை நகர்த்திய சிறுபன்மையினருக்கு ஏற்படப்போகிறதோ தெரியாது. சுதந்திர தினத்தில், ஜனாதிபதி நிகழ்த்திய உரை இவ்வாறுதான் எண்ணத் தூண்டுகிறது. “குடிமக்கள் அனைவரும் சம அதிகாரங்களுடன் வாழ வழி ஏற்படுத்தப்படும். மொழி, இன மற்றும் மத அடிப்படையில் அதிகாரங்களைக் கூறுபோட அரசாங்கம் தயாரில்லை, பௌத்த தேசியவாதி நான்” என்பதை பகிரங்கமாகக் கூற விரும்புவதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார். இந்த உரையைப் பலரும் பல்வேறு கோணங்களில் பகுப்பாய்வு செய்கின்றனர். தங்களது எண்ணங்களை யதார்த்தமாக்க முனையும் ஒரு பகுதியினர், இவ்வுரையிலுள்ள இறுமாப்புக்களைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு, ஜெனீவாவில் சாட்சியாக முன்வைத்து நீதி கோரலாம். ஆனாலும் அரசும், அறிவியல் ரீதியாக ஆதாரங்களை நிரூபிக்காமலாவிடும் சிறுபான்மை, பெரும்பான்மை என்றில்லை. குடிமக்கள் அனைவரும் சமம் என்ற செய்திதான் ஜனாதிபதியின் உரையிலுள்ளது. இதே, பாணியில்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் கருத்தாடல்களை முன்வைத்த ஞாபகம் இருக்கிறது. “போரை முடித்து பயங்கரவாதத்தை ஒழித்தாயிற்று, நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்றில்லை. தாய்நாட்டை நேசிப்போர், நேசிக்காதோர் என்ற இரு இனங்களே உள்ளன” என எடுத்துரைத்தார்.

இலங்கை அரசியலில் ஆழ, அகலம் நிறைந்த புதிய சிந்தனைச் சிதறல்கள் இவை. குடிமக்கள் எவரும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பமாட்டார்கள் என்பதுதான், ராஜபக்ஷ அரசின் நிலைப்பாடு. அவ்வாறு செய்வோரெல்லாம் அந்நிய சக்திகளின் “அஜந்தாக்கள்”. மொழி, மத, இன உணர்வுகளால், இவர்களை சில அந்நிய மேலாதிக்கவாதம் தூண்டிவிடுகிறது. இத்தூண்டுதலை உள்நாட்டில் தூக்கிப் பிடிக்கும் எந்த சக்திகளும் இலங்கையின் குடிமக்கள் இல்லை என்கிறது இந்த அரசாங்கம்.

”ஈஸ்டர்” தாக்குதலுக்குப் பின்னாலுள்ள வெளிநாட்டு சக்திகளை அடையாளம் காண்பதில் இந்த அரசுக்குள்ள ஆர்வம் எல்லையின்றி விரிந்துள்ளதும் இதற்காகத்தானே. சுமார் 274 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு ஆயிரம் சாட்சிகளின் விபரங்கள் அடங்கிய, 100,000 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டாயிற்று. சுமார் பத்து மில்லியன் ரூபா செலவில் இவ்வறிக்கை அச்சிடப்பட்டு, ஆவணமாக்கப்பட உள்ளதே ஏன்? இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட வால், வயிறு, தலை மற்றும் மூளை எல்லாம் கண்டறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான். குற்றவாளிகளுக்குச் சாயம் பூசுவது, அரசின் செயற்பாடுகளுக்கு, தங்களது எண்ணங்களுக்கு ஏற்ற வர்ணம் பூசுவது எல்லாம் பிரிவினைவாதமாகத்தான் கருதப்படும். கடும் கம்பீரமாகத் தெறித்த ஜனாதிபதியின் சுதந்திர தின உரை சொல்வது இதைத்தான்.

அரசின் இந்த யாதார்த்தத்தின் அடிப்படையில்தான், ஜெனிவாவை நம்பியுள்ளோரின் அரசியல், எண்ணங்கள் யதார்த்தமாக்கப்படல் அவசியம். இறுதிப் போரைக் கூட, பயங்கரவாதத்திலிருந்து மனிதாபிமானத்தை மீட்கும் போரென்று, ராஜபக்ஷ அரசு கூறியதை நினைவில்கொள்ள வேண்டிய ஒரு சங்கடத்தையும்., ஜெனீவாவை நம்பும் தரப்புக்கு இவ்வுரை ஏற்படுத்தியுள்ளது. “இனப்படுகொலை” என்ற வார்த்தைக்கு வலுச் சேர்க்கும் ஆதாரங்களுக்கெல்லாம் அரசாங்கம் பதில்களைத் தயாரித்துவிட்டதாக நம்பப்படுகின்றது. ஜெனீவாவுக்கு அனுப்புவதுதான் பாக்கியாக இருக்கிறது.

“புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த குடிமக்களை விடுவிப்பதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கினோம். இதற்காக கனரக ஆயுதங்களை யுத்த களத்தில் பாவிப்பதையும் நிறுத்தினோம். ஆனால், புலிகள்தான் குடிமக்களைக் கேடயங்களாகப் பாவித்து, பலிக் கடாக்களாக்கிவிட்டனர்”. அரசின் இந்த புதிய பதில்தான் ஜெனீவாவுக்கு விரைகிறது. போராளிச் சிறுமிகளை கைது செய்த படையினர், அவர்களுக்கு குளிர்பானம், உணவூட்டும் காட்சிகளும் வீடியோ “கிளிப்களாக” தயாராகிறது. கடந்த பத்து வருடங்களாகவும் ஜெனீவாவில் இவை, சாட்சியாகக் காட்டப்பட்டவைதான். ஆனால், இவற்றுக்கான அரசின் புதிய கருத்தாடல்கள் பயனளித்தால், அடுத்த முறையும் அலைய நேரிடலாம். இதனால், யதார்த்தம் தப்பாத எண்ணங்களில் நீதி கோர வேண்டிய நிலையைத் தெரிய நேரிட்டுள்ளது. அவ்வாறானால், ஒரு மதத்தின் செல்வாக்குக்கு மட்டும் உட்பட்டவராக, ஜனாதிபதி தன்னை அறிமுகப்படுத்தி ஒருநிலைவாதியாக வெளிக்காட்டியது ஏன்? என்ற கேள்விகளும் எழத்தான் செய்கிறது. தன்னைத் தெரிவு செய்த மக்களின் (மத) செல்வாக்கிற்கு உட்பட அவர் விரும்புகிறார். ஒரு காலத்தில் பிரேமதாசா, சந்திரிக்கா ஆகியோர் போன்று பல மக்களின் (மத) வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தால், இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கூற முடியாதுதானே.

அயல்நாடுகள், அந்நிய சக்திகளின் தலையீடுகளை அடியோடு நிராகரித்ததிலிருந்து இந்திய உறவிலும் சில விரிசல்களோ என, அரசியல் விமர்சகர்கள் நோக்கத் தொடங்கி உள்ளனர். கொழும்பு துறைமுக கிழக்கு முனையம், இந்திய மீனவர்கள் மீதான இலங்கை இராணுத்தின் துப்பாக்கிச் சூடு, மேலும் மாகாண சபைகளின் தேர்தல்களைக் காலங் கடத்துவதெல்லாம் அயலவர் உறவில் சீண்டல்களை ஏற்படுத்தி இருக்கும். அதுவும் தமிழ் நாட்டில் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தச் சீண்டல்கள் எல்லாம் இந்தியாவைப் பொறுத்த வரை தன்மானப் பிரச்சினை. தமிழ் நாட்டின் தனது பங்காளியான தி.மு.வையும் சமாளிக்க வேண்டுமே மோடியின் அரசு. எல்லோரது ஆட்சிக் கனவிலும் கரியைப் பூசியது போல, சசிகலா அம்மாவும் வெளியே வந்து, குழந்தைகளுக்கு பாலும் பழமும் ஊட்டி, உற்சாகப்படுத்துவது, இந்திய அரசின் தொண்டைக்குள் முட்களைப் பொறுக்க வைத்திருக்கும். இந்நிலையிலா? இலங்கை விடயத்தில் இந்தியா பொறுமைகாக்கும்? தொண்டைக்குள் சிக்கிய முள்ளை எடுப்பதற்கு ஜெனீவா வைத்தியரை நாடுவதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழிகள் இருக்காதே! “கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்” என்ற பாடலில், பொறுமை என்ற சொல்லை இந்தியாவின் பங்கிற்கு சேர்ப்போம்.

Related posts

சிறையில் வாடிய றிஷாட் மீண்டும் வன்னி மண்ணை நோக்கி பயணம்

wpengine

கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதி கொழும்புக்கு திடீர் இடமாற்றம்

wpengine

“பேசுகிறவர்கள் பேசட்டும்” அமைச்சர் றிஷாட் பதியுதீன்

wpengine