திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நாளையதினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கவுள்ளார்.
மேலும் இப்பதவியேற்பு நிகழ்வில் கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவரும் நாளை காலை 9 மணிக்கு பதவியேற்கவுள்ளனர்
அன்னலிங்கம் பிரேமசங்கர் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார்.
1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவக்கச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் என யாழ் மாவட்டத்தில் அனைத்து நீதிவானாகவும் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார்.
சுமார் 14 ஆண்டுகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த .வர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக பின்னர் 2013ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக பதவி வகித்ததுடன் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம்இ திருகோணமலை, வவுனியா மட்டக்களப்பு என மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் முதல் நிலை நீதிபதியாகத் தொடர்ந்த நீதிபதியாகிய இவர் தலைமை நீதியரசர் முறுது பெர்னான்டோ தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையுடனும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்படுகிறார்.