காலி மேதினக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எவரேனும் வராவிட்டால் பதவி, தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள் வகிக்கும் பதவிகளும் இல்லாமலாக்கப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு மேதினத்தையே நடத்துகிறது. அது காலியில் நடைபெறும் கூட்டமாகும். கட்சி ஆதரவாளர்கள், உண்மையாகவே கட்சியை நேசிக்கின்றவர்கள் காலிக்கு வரவேண்டும். எந்தவொரு கட்சிக்கும் கொள்கை ஒன்று இருக்கின்றது. கொள்கையை கடைப்பிடிப்பது அனைவரதும் கடமையாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்கு ஒருசிலர் முயற்சித்து வருகின்றனர். கட்சியை ஒருபோதும் பிளவுபடுத்த முடியாது. யாரேனும் கட்சியை பிளவுபடுத்த நினைத்தால் அவர்கள்தான் இல்லாமலாக்கப்படுவார்கள். வரலாற்றில் பல தடவைகள் பலர் கட்சியை விட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இறுதியில் மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
அதேபோன்று சுதந்திர கட்சியில் உறுப்பினராகி நாட்டில் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் மற்றும் கட்சியின் மூலம் பல பதவிகளை வகித்தவர்கள் கட்சியை பலப்படுத்துவது அவர்களின் கடமை. கட்சியை தொடர்ந்து முன்கொண்டு செல்வதென்றால் சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்துக்கு கட்டாயம் அவர்கள் வரவேண்டும்.
அவ்வாறு அவர்கள் வரவில்லையென்றால் அவர்களின் கட்சி உறுப்புரிமை இல்லாமலாக்கப்படலாம். ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் எவரேனும் காலி மேதின கூட்டத்துக்கு வராவிட்டால் பதவி தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி கட்சியின் மத்திய குழுவில் தீர்மானித்துள்ளார் என்றார்.