பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூன்று பெண்களை வைத்துள்ளதாக மத சுதந்திரத்திற்கான அமைப்பின் பௌத்த தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேவஹூவே சந்திரானந்த தேரர், ஹீனடியே சமித்த நாயக்க தேரர், மகல்கடவல புண்ணியசார தேரர் ஆகியோர் இதனை கூறியுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக அஸ்கிரிய பௌத்த பீடத்தினர் கூறியுள்ளதை இந்த தேரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மூன்று குடும்பங்களை கொண்டுள்ள ஞானசார தேரர் பல வருடங்களுக்கு முன்னர் நாட்டில் தீ மூட்டிய போது, அவற்றை செய்ய வேண்டாம் என எச்சரிக்காத அஸ்கிரிய மாநாயக்கர், ஞானசார தேரரின் நிலைப்பாடுகள் சரியானது எனக் கூறுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அஸ்கிரிய பீடம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அஸ்கிரிய மாநாயக்கர் கள்ள வாக்குகளால் மாநாயக்கராக தெரிவு செய்யப்பட்டவர் எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சில பிக்குகள் தாம் ஞானம் பெற்று விட்டதாக கூறுகின்றனர். புத்த பகவானின் 4 புனித பற்கள் மாத்திரமே இருப்பதாக வரலாற்றில் கூறப்படுகிறது.
ஆனால் இலங்கையில் சகல விகாரைகளிலும் புத்தரின் புனித பல் இருப்பதாக கூறுகின்றனர். இது குறித்து மாநாயக்க தேரர்கள் தேடி அறிந்தனரா?
விகாரைகளுக்கு பொறுப்பான தேரர்கள் இறந்த பின்னர் அஸ்கிரிய பீடத்தினர் அந்த விகாரைகளை பலவந்தமாக கைப்பற்றுகின்றனர்.
குருணாகலில் உள்ள ஏத்கந்த விகாரை இதற்கு சிறந்த உதாரணம். 19 விகாரைகளால் தெரிவு செய்யப்பட வேண்டிய அஸ்கிரிய பீடத்தின் தெரிவுகுழுவை 5 விகாரைகள் மாத்திரமே தெரிவு செய்தன.
இது எப்படி சட்டரீதியாகும்? இப்படியானவர்களின் அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பாய், தண்ணீர் குடம், தேங்காய் சிறட்டை, நாற்காலி ஆகியன மாத்திரமே தியான கூடத்தில் இருக்க வேண்டும்.
ஆனால், பிக்குமாரின் தியான கூடங்களில் கட்டில்கள், குளிர்சாதன வசதிகள் இருக்கின்றன. இப்படியான பௌத்த பிக்குகள் புத்தசாசனத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் மத சுதந்திரத்திற்கான அமைப்பின் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்