Breaking
Fri. Sep 20th, 2024
கடந்த மாகாண சபை தேர்தலில் எமது கட்சிக்கு ஒரு சில வாக்குகள் குறைவாக கிடைத்ததனால் இன்னுமொரு பிரதிநிதி வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்டோம். எனக்கு அடுத்ததாக வந்த எமது கட்சியின் மூத்த உறுப்பினர் அலிகான் ஷரீப் அவர்கள் வெற்றி பெறாத கவலை எமது கட்சியின் தலைவருக்கு இருந்தது. எனவே அந்த கவலையை நிவர்த்தி செய்வதற்காகவும் அரசியலிலே நாங்கள் ஒரு முன்மாதிரியைக் காட்டுவதற்காகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்வதாக இன்றைய (06) அமர்வின் இறுதி உரையில் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடமாகாண சபையின் உறுப்பினராக என்னைத் தெரிவு செய்த மன்னார் மாவட்ட வாக்காளப் பெருமக்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

அதே போன்று என் மீது நம்பிக்கை கொண்டு தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்திய எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும், அவர் தலைமை தாங்கும் கட்சிக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

கடந்த மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு மக்கள் அளித்த வாக்குகளை விட எனக்களித்த வாக்குகள் விகிதாசாரத்தில் அதிகமானது. எனவே அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் நான் மீண்டும் நன்றிகளைக் கூறுகின்றேன்.

இந்த சபையிலே நான் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போதும் வட மாகாண சபை மேற்கொண்ட மக்கள் நலன் சார்ந்த அத்தனை விடயங்களுக்கும் எனது பூரண ஒத்துழைப்பை நல்கி இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

அதே போன்று எங்கள் கட்சியைச் சார்ந்த ஏனைய 3 உறுப்பினர்களும் இந்த சபையின் மக்கள் நலன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றார்கள் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

நான் சார்ந்த சமூகம் வாழ்க்கையிலே பாரிய பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கின்றது. உடுத்த உடையோடு அகதிகளாக வெளியேறி புத்தளம் அகதி முகாமில் வாழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.

அதே போன்று எமது கட்சியின் தலைவரும் சகோதரருமான அமைச்சர் றிஷாத் பதியுதீனும் அகதியாக வெளியேறி முகாமில் வாழ்ந்தவரே.

முகாம்களில் இந்த மக்களுடன் சேர்ந்து நாங்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.

எனவேதான் அகதி மக்களின் விடிவை மையமாகக் கொண்டே எங்கள் கட்சியின் தலைவர் அரசியலில் பிரவேசித்தார். அவர் எம்.பி யாகி பின்னர் அமைச்சரானார்.

இறைவன் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையும் இறைவனின் உதவியும் அவருக்கு கிடைத்ததனாலேயே கட்சி ஒன்றை ஆரம்பித்து மக்கள் பணி செய்து வருகின்றார்.

மத்திய அரசிலே எங்கள் கட்சி பங்காளிக் கட்சியாக இருந்து பணியாற்றி வருகின்றது. எனினும் எமது கட்சியின் தலைவர் பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற போதும் அவற்றையெல்லாம் தாண்டி நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்தும், போராட்டம் நடாத்தியும் வருகின்றார். இனமத பேதமின்றி அவர் பணி செய்து வருவதனாலேயே  சிறுபான்மை மக்கள் எமது கட்சியில் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த மாகாண சபை தேர்தலில் எமது கட்சிக்கு ஒரு சில வாக்குகள் குறைவாக கிடைத்ததனால் இன்னுமொரு பிரதிநிதி வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்டோம். எனக்கு அடுத்ததாக வந்த எமது கட்சியின் மூத்த உறுப்பினர் அலிகான் ஷரீப் அவர்கள் வெற்றி பெறாத கவலை எமது கட்சியின் தலைவருக்கு இருந்தது. எனவே அந்த கவலையை நிவர்த்தி செய்வதற்காகவும் அரசியலிலே நாங்கள் ஒரு முன்மாதிரியைக் காட்டுவதற்காகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து எனக்கு அடுத்ததாக வந்த அலிகான் ஷரீபுக்கு எனது பதவியை விட்டுக்கொடுக்க நான் முடிவு செய்தேன்.

எனது பதவிக்காலத்தில் மனச்சாட்சியுடனும் இனமத பேதமின்றியும் எனக்கு வாக்களித்தவர்களுக்கும் என்னைத் தேடி வந்தவர்களுக்கும் அவர்களது தேவைகளை முடிந்தளவில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றேன் என்ற மனத்திருப்தி எனக்கிருக்கின்றது.

அதே போன்று வடமாகாண சபையில் எனது வேண்டு கோளுக்கிணங்க கிடைத்த ஒதுக்கீடுகளையும் வரவு செலவு திட்டத்தின் எனக்குரிய நிதியொதுக்கீடுகளையும் இனமத பேதமின்றி மக்கள் பணிகளுக்காக பயன்படுத்தி இருக்கின்றேன். அதே போன்று எனது இந்த உறுப்பினர் பதவியைப் பெறும் சகோதரர் அலிகானும் அவ்வாறு செயற்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

கடந்த 30 வருட கால யுத்தத்தினாலு நாங்கள் இழந்த இழப்புக்கள், பட்ட கஷ்டங்கள், துன்ப துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

இந்த போராட்டங்களின் விளைவினாலும் பிரதிபலிப்பினாலும் இந்த வடமாகாண சபை உருவாக்கப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பின்னரான காலப் பகுதியின் சுமார் அரைப்பங்கு காலம் நாங்கள் நிம்மதியிழந்தும் வாழ்க்கையில் பல்வேறு கொடூரங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்திருக்கின்றோம்.

1990 ஆம் ஆண்டில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமானது இன்னும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கின்றது. இரண்டு தசாப்தத்துக்கு மேலாக சொல்லொணா வேதனைகளிலும் துன்பத்திலும் இந்த மக்கள் வாழ்ந்தனர். சமாதானம் ஏற்பட்ட பின்னர் அகதி மக்கள் தமது பாரம்பரிய பூமிகளில் மீளக்குடியேறி வாழ்வதற்கு, 5/6 பெரும்பான்மையுடன் மக்களின் ஆணை பெற்று அதிகாரத்துக்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன்.

குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினைக்கு முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான விக்னேஸ்வரன் ஐயா அவர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து ஒட்டுமொத்தத் தீர்வுகளைக் கண்டு இந்த மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிகோல வேண்டும்.

இதனை வட மாகாண சபை தனது ஆட்சிக்காலத்தில் செய்தால் இந்த நாட்டின் இன்னொரு சிறுபான்மை மக்களின் பிரச்சினையை நேர்மையாகத் தீர்த்து வைத்த நற்பெயரை பெற்றுக்கொள்ளலாம்.

எனது பதவிக்காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் அமைச்சர்களான டெனீஷ்வரன், சத்தியலிங்கம், இந்நாள் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *