பிரதான செய்திகள்

மூடப்பட்ட கிணற்றில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! மனிதப் புதைகுழி

மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்ட மனிதப் புதைகுழியை அண்மித்த பாழடைந்த கிணறு ஒன்றைத் தோண்டுவதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து, நேற்று  (திங்கள் கிழமை) அகழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மருத்துவ சட்டவியல் பிரிவினர், புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இணைந்து இந்த அகழ்வு பணியை மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆரம்பித்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் வீதியோரத்தில் நீர் விநியோகத்திற்கான குழாய்களைப் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டிய பணியாளர்கள், இரண்டு மனித எலும்புக்கூட்டு எச்சங்களைக் கண்டு பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து, அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் சுமார் 80 பேருடைய மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தனர்.

எனினும், அந்த இடத்தில் முன்னர் கிராம மக்களின் பொதுத் தேவைக்கான இடுகாடு ஒன்று இருந்ததாக பொலிஸார் வெளியிட்ட கருத்தை ஏற்க மறுத்த காணாமல் போனோரைத் தேடிக்கண்டறியும் சங்கத்தினர், அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் மூடப்பட்டுள்ள ஒரு பாழடைந்த கிணற்றிலும், மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு, அந்தக் கிணற்றைத் தோண்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனையடுத்து, மன்னார் மாவட்ட நீதவானின் உத்தரவுக்கமைய நேற்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிய விக்னேஸ்வரன்

wpengine

WhatApp தனிப்பட்ட அரட்டைகளில் யார் வேண்டுமானாலும் இதனை செயற்படுத்த முடியும்

wpengine

அவசர நிதிகளை பெறுவதில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தடை

wpengine