(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)
கடந்த காலத்தில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தலைவர் தேசிய கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாக முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தி குழுவினரால் அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டினை முதன் முதலில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் பசீர் சேகுதாவூத் அவர்களே முதலில் ஆரம்பித்துவைத்தார்.
முஸ்லிம் காங்கிரசை அழிக்க துடிக்கும் சக்திகளுக்கு இந்த குற்றச்சாட்டானது பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று தலைவர் ஹக்கீம் மீது வசைபாடுவதுக்கு இது துரும்பாக அமைகின்றது.
பகுத்தறிவு உள்ள மனிதராக இருந்தால் ஒரு விடயத்தினை நாங்கள் சிந்திக்க வேண்டும். அதாவது பணம் எதற்காக பெற்றோம் என்பதுதான் அது. தேர்தல் செலவுக்காக பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதே தவிர, அந்த பணத்தினைக்கொண்டு கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக அல்ல. அவ்வாறான அபிவிருத்திக்கு அது போதுமானதுமல்ல.
ஒரு தேர்தல் நடாத்துவதென்றால் அதன் செலவுகள் எப்படி அமையும் என்பது தேர்தலில் அனுபவப் பட்டவர்களுக்குத்தான் தெரியும். சிலர் தெரிந்திருந்தும் வேண்டுமென்று விமர்சிப்பதற்கு அவர்களது மனட்சாட்சியே பதில் கூற வேண்டும்.
அத்துடன் இவர்கள் கூறுவது போன்று தேர்தல் செலவுகளுக்காக பணம் பெற்றிருந்தால் அது கேட்டு பெற்றிருக்க வேண்டும். அல்லது தேசிய கட்சிகளே வழங்கியிருக்க வேண்டும். மாறாக அது மக்கள் பணத்தினை கொள்ளையடித்ததாகவோ, களவெடுத்ததாகவோ முஸ்லிம் காங்கிரஸ் மீது இவர்கள் குற்றம் சாட்டவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால் மக்கள் பணத்தினை கொள்ளை அடித்து ஏப்பமிட்டவர்கள் எல்லோரும் வசைபாடுகின்றார்கள். அவர்களது பார்வையில் மக்கள் பணத்தினை கொள்ளையடிப்பதனை விட வெளிப்படையாக வாங்குவதனை குற்றம் என்கின்றார்கள்.
அதாவது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்மீது சேறு பூசுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்ற சில தீயசக்திகள் ஒரு சிறிய விடயத்தினை இருட்டடிப்பு செய்து தங்களது ஊடக பலத்தினைக் கொண்டு மக்கள் மத்தியில் சேறு பூசிவருகின்றார்கள்.
தேர்தல் ஒன்றினை எதிர்கொள்வதென்றால் அதற்கு பணம் பிரதானமானது. அதிலும் யாரோ ஒரு மைத்திரிபால சிரிசேனா, ரணில், மகிந்த போன்ற சிங்களவர்களுக்காக நாடு தழுவிய ரீதியில் பணம் செலவழித்து தேர்தல் நடாத்துவதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு என்ன தேவை இருக்கின்றது? அல்லது சிங்கள அரசாங்கம் ஒன்றினை ஆட்சியில் அமர்த்துவதற்காக நாங்கள் ஏன் பணம் செலவழிக்க வேண்டும்?
தேர்தல் நடாத்துவதென்றால் ஒவ்வொரு அசைவுகளுக்கும் பணம் தேவைப்படும். ஒரு பொதுக்கூட்டம் நடாத்துவதென்றால் அன்றைய செலவு மட்டும் மூன்று இலட்சங்களுக்கு மேல் செலவாகும். நாடு தழுவிய ரீதியில் கூட்டம் நடாத்துவதென்றால் எவ்வளவு பணம் செலவாகும் என்று சிந்திக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது ஏனைய செலவுகள், அதாவது வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து ஏற்படுகின்ற வாகனம், எரிபொருள், சாப்பாடு மற்றும் இதர செலவுகள், தேர்தல் தின செலவுகள் மற்றும் கௌண்டிங் போன்ற செலவுகள் ஒருபுறமிருக்க, தேர்தலுக்கு திகதி அறிவித்ததும் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலுமிருந்து சங்கங்களும், விளையாட்டு கழகங்களும், இளைஞ்சர் கழகங்களும், சமூக அமைப்புக்களும் உதயமாகுவதோடு, பள்ளிவாசல்கள் புனரமைப்புக்கும் நாலாபுறத்திலிருந்தும் நிதி சேகரிக்க வருவார்கள்.
தங்களுக்கு இத்தனை இலட்சங்கள் தந்தால்தான் நாங்கள் ஆதரவளிப்போம். தராவிட்டால் வேறு கட்சி அல்லது வேறு வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவோம் என்று நிபந்தனை விதிப்பார்கள். அவர்களது கோரிக்கைகளை நிராகரிக்க முடியாமல், வேறு வழியின்றி அவர்களுக்கு பணம் வழங்கித்தான் ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு நாட்டிலுள்ள நூற்றுக்கனக்கான முஸ்லிம் பிரதேசங்களுக்கு பணம் பகிர்ந்தளிப்பது வழமை. இப்படியெல்லாம் பணங்களை வாரியிறைத்து பங்கீடு செய்வதற்கு பணம் அச்சடிப்பதா? அல்லது கொள்ளையடிப்பதா? எங்கிருந்து பெற்றுக்கொள்வது?
முதலாவது தொடர்……….