(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)
ஒருவன் திருடன் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டால், அவன் திருடச் செல்லும் போது பல வடிவங்களில் செல்வான். ஒரே வடிவத்தில் சென்றால் கையும் மெய்யுமாக பிடித்து விடுவார்கள். அதைப் போன்று தான், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மு.கா பல வடிவங்களில் தேர்தல் கேட்கின்றது. அதிலும் விசேடம் என்னவென்றால், தற்போது ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் மு.கா இரண்டு வடிவங்களில் தேர்தல் கேட்கின்றது. இங்கு தான், எமது சிந்தனைகளை நுழைத்து, பல விடயங்களை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இந்த விடயத்துக்கு, அண்மையில் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் நஸீர் ஹாபிசுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையே அடிப்படை காரணம் என்பது யாவரும் அறிந்ததே. இருவரும் மாறி மாறி கண்ணியத்துக்குரிய பெற்றோரை கூட இழிவுபடுத்தி இருந்தனர். அவர்களுக்கிடையிலான பிரச்சினை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பானதும் கூட. உண்மையில் அலி சாஹிர் மௌலாவுக்கு தன் மானம் என்ற ஒன்று இருந்திருந்தால், நஸீர் ஹாபிசை புறந்தள்ளி, தனது ஆதரவாளர்களை மரத்தில் அல்லது மு.காவின் கூட்டுக் கட்சியில் களமிறக்கியிருக்க வேண்டும். அல்லது போனால், மு.கா என்ற கட்சியை முற்றாக புறந்தள்ளி தனித்து சுயேட்சையில் களமிறங்கியிருக்க வேண்டும்.
அவ்வாறல்லாது சுயேட்சையாக களமிறங்கியும் அமைச்சர் ஹக்கீமினது புகைப்படத்தை இணைத்து தேர்தல் கேட்பதைப் போன்ற கேவலம் வேறு எதுவுமில்லை. ஏறாவூர் நகர சபையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அணியினர் ஐ.தே.கவுடன் (மு.கா செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில்), அதாவது தனது கட்சியில் தேர்தல் கேட்டுள்ளார். இங்கு மு.காவினால் புறக்கணிக்கப்பட்டுள்ளவர் அலி சாஹிர் மௌலானாவேயாகும். தனது பெற்றோரை இழிவு படுத்தியது மாத்திரமல்லாது, கட்சியாலும் புறக்கணிக்கப்பட்டும் அமைச்சர் ஹக்கீமின் புகைப்படத்தை வைத்து தேர்தல் கேட்க வெட்கப்பட வேண்டும்.
இப்படியானவர் அழுது புலம்பியது வெறும் அனுதாப வாக்குகளை பெறுவதற்காகவா என்ற சந்தேகமும் எழுகிறது. அவர், தனது பெற்றோரை இழிவுபடுத்தியதை வைத்து அனுதாப வாக்கு பெறுவதைப் போன்ற கேவலம் உலகில் வேறு எங்கும் இராது. தனது பெற்றோரின் கண்ணியத்தை காக்கும் பிள்ளையாக அலி சாஹிர் மௌலானா இருப்பின், இந்த வேலை ஒரு போதும் செய்திருக்க மாட்டார்.
மு.காவின் உண்மையான சின்னம் மரம். அதை அமைச்சர் ஹக்கீம் யானைக்கு வாடகைக்கு விட்டு விட்டார். ஏறாவூரில் யானையிலும், தராசிலும் தேர்தல் கேட்கின்றார். மு.காவின் போராளிகளிடம் ஏதேனும் கேட்டால் “மு.காவின் தனித்துவமான கட்சி மு.கா மட்டும் தான் என்பார்கள்”. அந்த மு.காவின் இன்றைய நிலை, அதுவும் எங்கள் கட்சி தான், இதுவும் எங்கள் கட்சி தான் என்பது போன்றாகும். அவவும் எனது மனைவி தான், இவவும் எனது மனைவி தான் என்பதற்கு இடையில் எவ்வித வேறு பாடுமில்லை. இப்படியான மு.கா தான், முஸ்லிம்களின் தனித்துவமான கட்சியா?
மர்ஹூம் அஷ்ரப் மு.காவை ஆரம்பித்து இலங்கை முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். அதுவே ஒரு கட்சியின் செயற்பாடும் குறிக்கோளுமாகும். ஆனால், அமைச்சர் ஹக்கீமால் தனது கட்சி ஆதரவாளர்களை கூட ஒற்றுமையாக வைத்திருக்க முடியவில்லை. அது மாத்திரமன்றி அலி சாஹிர் மௌலானாவின் சுயேட்சை குழுவும், எங்களுடையது தான் என கூறுவதற்கு, அமைச்சர் ஹக்கீம் ஒரு உறுதியான தலைவராக இருப்பின் வெட்கிக்க வேண்டும். கள்ள மனைவியின் குழந்தையை யாரவது பெருமையுடன் ஏற்றுக்கொள்வார்களா? அமைச்சர் ஹக்கீம் தலைமைத்துவத்துக்கு பொருத்தமானவரல்ல என்பதை அறிய, இதனை விட என்ன சான்று வேண்டும்.