நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்ஸிம் மக்களையும் சந்தேக கண்ணுடன் பார்ப்பது தவறு என மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய சமாதான பேரவை மற்றும் தொடர்பாடலுக்கான மையம் என்பன இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள சர்வ மத தலைவர்களையும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் கடந்த மாதம் 21ஆம் திகதி, நாங்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் துன்பகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ், முஸ்ஸிம், சிங்களம் என்று இல்லாமல் எல்லா மதத்தை சேர்ந்தவர்களினதும் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் குணமடையவும் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம். உலக நாடுகளுடன் பார்க்கும் போது இலங்கை பல்வேறு வளங்களை கொண்ட அழகு மிக்க நாடாக காணப்படுகின்றது.
இந்த நாட்டில் வாழும் நாம் ஒவ்வொருவரும் கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பல்வேறு பாதிப்புக்களையும், இன்னல்களையும் சந்தித்தவர்கள்.
அந்த கசப்பான மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு பிற்பாடு நல்லிணக்கத்துடன் சர்வ மதங்களுக்கும், இனங்களுக்கும் இடையில் ஒற்றுமையுடன் நாட்டில் வாழ்ந்து வந்தோம்.
நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்த எம் மக்கள் மத்தியில் தீவிரவாத கொள்கை உடைய குறிப்பிட்ட சிலரின் செயற்பாட்டினால் இன்று பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அனைத்து முஸ்ஸிம் மக்களையும் சந்தேக கண்ணோடு பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட காலம் முஸ்ஸிம் மக்களுடன் மிகுந்த நற்புறவுடன் வாழ்ந்து வருகின்றோம்.
ஒரு சிலரின் தீவிரவாத நடவடிக்கையினால் ஒட்டு மொத்த முஸ்ஸிம் சகோதரர்களையும் நாங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது தவறு.
இந்த தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகள் சட்டத்தின் பிடியில் இருந்து தவறினாலும் இறைவனின் பிடியில் நிச்சயம் உண்டு.
எங்களுடைய கடமை நேரத்தில் கூட மிகவும் விழிப்பாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டியுள்ளது. பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது மற்றும் கிடைக்க பெறுகின்ற தகவலின் அடிப்படையில் கைது செய்யப்படுகின்ற சந்தேகநபர்கள் கூட, அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்றால் மட்டுமே அவர்களுக்கான பாரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அது தான் நீதியும், நியாயமும் கூட. எங்களுக்கு வெவ்வேறு நபர்கள் வழங்குகின்ற இரகசிய தகவல்களை உரிய முறையில் பரிசோதனை செய்து அதன் உண்மையை கண்டறிந்து தான் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்ற வகையில் எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 9 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளேன்.
சட்டத்தை மீறி செயற்படும் நபர்கள் மாத்திரமே கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
நாங்கள் எங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சரியான முறையில் தகவல்களை பரிசோதனை செய்து கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கும் செயற்திட்டத்தை மேற்கொள்வதே சரியான செயலாகும்.
நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன, மத ரீதியிலான வன்செயல்கள் மன்னார் மாவட்டத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய தரப்பினருக்கு தேவையான அறிவுறுத்தல்களும், கட்டளைகளும் வழங்கப்பட்டுள்ளன.
நமது நாட்டில் இருக்கக்கூடிய அவசர கால சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக இனம், மதங்களுக்கு இடையில் பிரிவினை வாதங்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றவர்களை கைது செய்து பல வருடங்களுக்கு தடுத்து வைக்க கூடிய கடுமையான சட்டங்கள் நடை முறையில் இருக்கின்றது.
நமது மாவட்டத்தில் ஒற்றுமையினையும், சமாதானத்தையும் சீர் குழைக்கின்ற செயல் திட்டங்களை யாராவது முன்னெடுத்தால் அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளும் மிகக் கடுமையானதாகவே இருக்கும்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் என்ற வகையில் மன்னார் மாவட்டத்தில் யாராவது நபரொருவர் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்க கூடிய செயலை மேற்கொள்ளும் போது கண்டறியப்பட்டால் அவருக்கு கூடுதலான தண்டனையை பெற்று கொடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.