கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாதம் சாதாரண முஸ்லிம்களின் அடையாளங்களை பறிக்கும்

மொஹமட் பாதுஷா  


உலகை ஆட்கொண்டுள்ள ‘இஸ்லாமோபோபியா’வும் மாறுவேடம் பூண்டுள்ள  இனவாத சக்திகளும்  அதேபோன்று, முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும், உலகெங்கும் பரவலாக வாழ்கின்ற சாதாரண முஸ்லிம்களின் அடையாளங்களைப் பறிகொடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருப்பதைக் அன்றாடம் காண்கின்றோம்.   

இந்தியா, இலங்கை தொட்டு மேற்குலக நாடுகள் வரை, பல தேசங்களின் அரசியல், இனவாதத்தின் முக்கிய மூலதனமாக, முஸ்லிம்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள்.  

இலங்கையில் இனவாத சம்பவங்கள் பல கட்டங்களாக இடம்பெற்றிருக்கின்றன. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், யார் ஜனாதிபதியாகப் பதவி வகித்தாலும் இந்த நாட்டில் இனவாதத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தவும் மாட்டார்கள் என்பதற்கு, நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன.  

சில உலக நாடுகளின், உள்நாட்டு அரசியலில் மத, நிற வாதங்கள் பெரும் செல்வாக்கைச் செலுத்தி வருவதைப் போல, கீழைத்தேய நாடுகளில் இனவாதமும் மதவாதமும் எல்லா மட்டங்களில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் பெரும் மூலதனமாக இருக்கின்றன.   

இதற்குக் காரணம், மிக இலகுவாகவும் விரைவாகவும் சந்தைப்படுத்தக் கூடிய சரக்காக, இனவெறுப்பு இருப்பதை, இலங்கையின் பெரும்பான்மையினக் கட்சிகள் அனுபவ ரீதியாகக் கண்டுள்ளமை ஆகும்.  

இந்தவகையில், இப்போது மீண்டும் முஸ்லிம் பெண்கள் அணியும், முகத்தை மூடும் ஆடை பற்றிய வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.   

இலங்கையில், முகத்தை முழுமையாக மறைக்கும் விதத்தில் அமைந்த புர்கா போன்ற ஆடைகளை, உடனடியாகத் தடைசெய்யுமாறு, தேசிய பாதுகாப்புத் தொடர்பான நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.  

இன, மத அடிப்படையில், கட்சிகள் பதிவுசெய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் இக்குழு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இவை நீங்கலாக, இனங்களுக்கு இடையிலான உறவு, சாத்தியமுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், மத்ரசாக்களின் கல்வி முறைமை, பாடத்திட்டம் போன்ற விடயங்களை உள்ளடக்கிய மொத்தமாக 14 பரிந்துரைகளை, மேற்படி கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கின்றது. இதனால், முஸ்லிம் பெண்களின் ஆடைகள் பற்றிய சர்ச்சை, மீண்டும் எழுந்திருக்கின்றது.  

இலங்கையில், முஸ்லிம்கள் மத்தியில் இவ்வாறான ஆடைக் கலாசாரம் இதற்கு முன்னைய காலங்களில் இருந்ததில்லை என்றும், அரபுலகில் இருந்து தருவிக்கப்பட்ட இந்தக் கலாசாரம் பல்லின நாடொன்றுக்கு தேவையில்லை என்றும் பௌத்த தேசப்பற்றாளர்கள் என்று காட்டிக்கொள்வோர் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.   

இது, சமூக உறவுக்குப் பாதகமானது என்ற அடிப்படையிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற வகையிலும் இதைத் தடை செய்ய வேண்டும் என்று, கடந்த பல வருடங்களாகக் கடும்போக்கு அமைப்புகள் கோரி வருகின்றன.  

நமது நாட்டில், முஸ்லிம்களின் ஆடைகள் குறிப்பாக புர்கா, நிகாப் என்பவை, அச்சுறுத்தல்மிக்க ஆடைகள் என்பதை, யாரும் இதுவரை நிரூபிக்கவில்லை. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னரான வெடிப்புகளுடன் தொடர்புபட்டவர்கள், இஸ்லாமிய ஆடையை உடுத்தி இருந்தார்கள் என்றாலும் அவர்களை, இலங்கை முஸ்லிம்கள், இஸ்லாமியர்களாகப் பார்க்கவில்லை; பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றனர்.  

இந்தத் தாக்குதலைத் தவிர, முஸ்லிம்களின் ஆடையை உடுத்திக் கொண்டு, இலங்கையில் எவ்வித பெரிய அசம்பாவிதங்களும் மேற்கொள்ளப்படவில்லை. தலைக்கவசம் அணிந்து கொண்டு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இடம்பெற்ற சம்பவங்களின் அளவுக்குக் கூட, புர்கா, நிகாப் போன்ற ஆடைகள் அச்சுறுத்தலானவையாகப் பதிவு செய்யப்படவில்லை.   

இவ்வாறிருக்கையில், கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், கள்வர்கள், போதைவஸ்து வியாபாரிகள், சமூக விரோதச் செயல்களைச் செய்த அரசியல்வாதிகள், பிரபலங்கள் எல்லாம் சுதந்திரமாக நடமாடித் திரிகின்ற நாட்டில், முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது மட்டும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறுவது, வினோதமாகவே இருக்கின்றது. ஆனாலும், இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை நன்றாககே ஊகிக்க முடிகின்றது.  

கடந்த வருடம் ‘ஏப்ரல் 21’ தாக்குதலுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ், முகத்தை மூடும் ஆடைகளுக்குத் தடை வந்தது. இதைக் கிட்டத்தட்ட அனைத்து முஸ்லிம்களும் அனுசரித்துச் செயற்பட்டனர். பின்னர், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமையால் புர்கா, நிகாப் வகை ஆடைகளுக்கான சட்ட ரீதியான தடையும் நீங்கியது.  

இத்தடை நீக்கப்பட்டமையும் அதேபோன்று, அத்தடையைத் தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு, அரசாங்கத்தைப் பாதுகாப்புத் தரப்பினர் கோரியிருக்கவில்லை. ஏனெனில், யதார்த்தபூர்வமாக இலங்கையில் ஒரு சிலரே இவ்வாறான ஆடைகளை அணிகின்ற ஒரு சூழலில், புலனாய்வுத் தரப்பினரோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, அரசாங்கமோ புர்காவை ஓர் அச்சுறுத்தல்மிக்க ஆடையாகக் கருதவில்லை என்பதையே உணர்த்தி நிற்கின்றது.  

ஆனால், திடீரென இந்த அச்சுறுத்தல் எங்கிருந்து வந்திருக்கின்றது என்று தெரியாது. அதுமட்டுமன்றி, தேவையேற்பட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதை நிரூபிப்பதற்கு, யாராவது திட்டமிட்டுச் செயற்பட்டு விடுவார்களோ என்ற சந்தேகமும் எழுகின்றது.  முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அங்கம் வகிக்கின்ற தேசிய பாதுகாப்புத் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்புக் குழு, தற்போது முகத்தை மூடும் ஆடையைத் தடைசெய்யுமாறு அறிவுறுத்தி இருக்கின்றமை, இவ்வகையான ஆடை அணியும், அதுபற்றிய சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில், ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.  

உலகெங்கும் நூற்றுக்கணக்கான ஆடைக் கலாசாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியம், சமூகம், இனம், கலாசாரம், மதம், வாழ்விடம் என்பவற்றுக்கு ஏற்றாற்போல் ஆடைப் பண்பாடுகளும் வேறுபட்டிருப்பதைக் காண்கின்றோம்.   

இலங்கையிலும் ஒவ்வோர் இனத்துக்கும் பாரம்பரிய, பண்பாட்டுடன் கூடிய ஆடைக் கலாசாரங்கள் உள்னன. ஆனால், மேற்குலக ஆடைக் கலாசாரங்கள், இலங்கையில் மூவின மக்களையும் ஆட்கொண்டு விட்டமையால், எமது அசல் ஆடைப் பாரம்பரியங்களை, நாம் உண்மையில் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என்பதை, மறந்து விடுகின்றோம் என்பதே நிதர்சனமாகும்.  

அந்த வகையில், முஸ்லிம் பெண்கள் அதுவும் குறிப்பாக மதப்பற்று அதிகமாகவுள்ள பெண்கள், தமது மதநம்பிக்கையாகவும் தமது அழகுக்கும் பெண்மைக்கும் பாதுகாப்பு எனக் கருதுகின்ற முழுமையான ஆடையானது, இன்று சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றது என்ற கணிப்பு, மிகவும் கவலை அளிப்பதாக இருக்கின்றது.  

அதுவும், கடந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம் நேசனாகத் தன்னைக் காட்டிக் கொண்டவரும், இலங்கையில் கருத்தியல் ரீதியான இனவாதச் சிந்தனையைத் தூண்டியவராகவும் கருதப்படுகின்ற சம்பிக்க ரணவக்க, மேற்படி தேசியப் பாதுகாப்புக் குறித்த நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை, “முடியுமானால் நிறைவேற்றிக் காட்டுங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.  

இதை நிறைவேற்றத் தமது ஆதரவும் கிடைக்கும் என்ற தொனியிலும் கருத்துக்கூறி, கடந்த ஐந்து வருடமாக அணிந்திருந்த முகமூடியைக் கழற்றியுள்ளார்.   

இலங்கை முஸ்லிம்களுக்குள், அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இந்த ஆடைக் கலாசார மாற்றம், அவசியமற்றது; இது ஏனைய சமூகங்களுக்கு இடையிலான உறவைத் தூரப்படுத்துகின்றது என்ற கருத்து, பெரும்பான்மைச் சமூகத்தை சேர்ந்த பலராலும் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்து பரிசீலனைக்குரியது.  

இது உண்மையில், அராபிய, சவூதியின் ஆடைக் கலாசாரம் அல்ல என்பதை, சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன், இது இஸ்லாமிய சமய அடிப்படையிலான நம்பிக்கையின்பாற்பட்டதும், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அணியப்படுவதும் என்பதிலும் தெளிவுபெற வேண்டியுள்ளது.   

இதைப் பொதுவாக, முஸ்லிம் பெண்கள் தமது உடலை மற்றவர் கண்களில் இருந்து பாதுகாக்கவே அணிகின்றார்களே தவிர, பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்துவதற்காக அல்ல என்பதை, அரசாங்கமும் ஏனைய சிங்கள, தமிழ் மக்களும் புரிந்து கொள்வது அவசியமாகும்.  மறுபுறத்தில், முஸ்லிம்களும் சில விடயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இலங்கை ஒரு பல்லின நாடு என்பதையும் அரபு நாடு அல்ல என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.   

இருக்கின்ற உரிமைகளை அளவுக்கதிகமாகவும் பக்குவமில்லாமலும் பயன்படுத்துவதன் மூலம், சட்ட ரீதியான தடையை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதையும் மறந்து விடக் கூடாது.  

இலங்கையில் முகத்தை மூடும் ஆடைகள், கடந்த 20-25 வருடங்களுக்கு உட்பட்ட காலத்திலேயே புழக்கத்துக்கு வந்துள்ளன. ஆனால், அதற்கு முன்வாழ்ந்த முஸ்லிம்கள் ஏன், இவ்வாறான ஆடையை அணியவில்லை என்று, சிங்கள மக்களால் முன்வைக்கப்படுகின்ற கேள்விக்கு, முஸ்லிம் சமூகத்திடம் சரியான விளக்கமில்லை.   

இப்போதுதான் நாங்கள் அறிந்து கொண்டிருக்கின்றோம் என்றோ, புதிய சமய அறிவுகளின் ஊடாக, மார்க்கப்பற்று அதிகரித்திருக்கின்றது என்றோ, ஏனைய மக்களுக்குக் கூற முடியாது.  

அதேவேளை, முகத்தை மூடுதல் தொடர்பாக, இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குப் புறம்பாக, முஸ்லிம்களின் பொதுவாழ்வில் அச்சமூகத்தினரிடையே இரட்டை நிலைப்பாடு இருக்கின்றது.   

மிக, முக்கியமாக புர்கா, நிகாப் ஆடை உடுத்துகின்ற ஒருசில பெண்கள், சிங்கள மக்கள் நடமாடுகின்ற பகுதிகளில், நகரங்களுக்குச் செல்கின்ற போது, அவர்கள் ஓர் அரபு நாட்டில் நடந்து கொள்வதைப் போல, நடந்து கொள்வதைக் காண முடிகின்றது.  

எனவே, பல்லின நாட்டுக்கு ஏற்றாற்போல், முஸ்லிம்களும் தமது போக்குகளைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது.   

விரும்பியபடி, ஒழுங்கான ஆடை அணிவது அரசமைப்பில் இலங்கையருக்கு இருக்கின்ற உரிமை ஆகும். எனவே, புர்கா அணிவது உரிமை என்பதில் மறுபேச்சில்லை.  

ஆனால், முகத்தை மூடியவர்களைக் காணும்போது, கடும்போக்குச் சிங்கள மக்களுக்கு, சகிப்புத்தன்மை இல்லாது போய்விடுகின்றது. இது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வித்திடுகின்றது.   

எனவே, இது விடயத்தில் போகின்ற வருகின்றவர்களுடன் விவாதம் செய்வதை விட, சிங்கள மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது, அவர்கள் உரையாட முற்படுகின்ற போது, பவ்வியமாகப் பதிலளிப்பதே மிகவும் புத்திசாலித்தனமானதாக அமையும். இல்லையென்றால், புர்காவுக்குத் தடை வந்த பின், அழுதழுது வீட்டுக்குள்தான் முடங்கிக் கிடக்க நேரிடும்.  

எது எவ்வாறாயினும், புர்கா அல்லது முகத்தை மூடும் ஆடைகள், பல சமூகங்கள் வாழும் இந்த நாட்டில், பல உரையாடல்கள், பொதுமைப்படுத்தல்களுக்கு உகந்ததல்ல என்று சொல்லப்படும் கருத்தை, கொஞ்சம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், புர்கா இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லப்படுவதை ஏற்பதற்குச் சிந்திக்க வேண்டியுள்ளது.  

எனவே, அரசாங்கம் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே, புர்காவுக்குச் சட்டத்தில் தடையில்லாத நிலையில் கூட, முஸ்லிம் பெண்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பாடசாலை, பரீட்சை மண்டபம், வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில், இனவாதக் கண்கள் அவர்களைத் துளைக்கின்றன.  

பல இடங்களில் அரச அதிகாரிகளே, முகத்தை மூடாத பர்தா, ஸ்காப் போன்ற ஆடைகளைக் கழற்றச் சொல்லி அடம்பிடிப்பதைக் காண்கின்றோம். இப்படியிருக்கையில், சட்ட ரீதியாக இந்த ஆடை தடைசெய்யப்படுமாக இருந்தால், முஸ்லிம்கள் தமது ஆடை உரிமையில் ஒன்றை இழக்க நேரிடும். அத்துடன், முஸ்லிம் பெண்களின் பல விதமான ஆடைகள் விடயத்தில், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி, அரச அதிகாரிகள் தொட்டு, இனவாதிகள் வரை, பலதரப்பட்ட நெருக்கடிகளைப் பிரயோகிக்கச் சாதகமான களநிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.  

உலகெங்கும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அதில், பல நாடுகளில் அவர்கள் தங்களது கலாசார ஆடையை அணிகின்றார்கள். சிலநாடுகளில் தேசிய ஆடையுடன் இணங்கிப் போகின்றார்கள்.  

இப்படியிருக்க, பல்கேரியா, டென்மார்க், கொசோவோ, லத்வியா, நெதர்லாந்து, கமரோன் உள்ளிட்ட 15 நாடுகளில், முகத்தை மூடும் ஆடைகளுக்கு, அவ்வரசாங்கங்கள் தடை விதித்திருக்கின்றன. ஓரிரு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுகளை, இலங்கை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.  

ஆனால், உலகில் 150இற்கும் மேற்பட்ட நாடுகள் இன்னும் புர்காவையோ, நிகாபையோ தடை செய்யவில்லை என்பதையும், கணிசமான நாடுகள் ஒழுங்கு விதிகளையே அமுல்படுத்தியுள்ளன என்பதையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.  எனவே, ஒன்றில் முகத்தை மூடும் (புர்கா, நிகாப்) ஆடைகளுக்காகப் போராடி வெல்லும் அரசியல் பலம், இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டும்.   

இரண்டாவது தெரிவாக, ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் போன்ற உயர் அமைப்புகளின் வழிகாட்டலில், இலங்கை முஸ்லிம்கள் சில பக்குவமான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அரசமைப்பால் வழங்கப்பட்ட உரிமை, சட்டத்தால் மீளப் பெறப்படாமல் இருக்கும் விதத்தில் செயற்பட வேண்டியுள்ளது. அதைவிடுத்து தீவிர மார்க்கம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.  

சமகாலத்தில், உலகளவில் கணிசமான நாடுகள் முகத்தை மூடும் ஆடையைத் தடை செய்யவில்லை என்பதையும், கட்டுப்பாடுகள், விதிமுறைகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதையும் கருத்திற் கொண்டு, இலங்கை அரசாங்கம் அவசியமேற்பட்டால் புர்கா மட்டுமன்றி முகம் மூடும் அனைத்து விதமான ஆடைகள், அணிகலன்களையும் தடைசெய்யாமல், ஒழுங்குபடுத்துவது பற்றி சிந்திப்பதே நல்லதெனத் தெரிகின்றது.  

Related posts

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

wpengine

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

wpengine

முல்லைத்தீவு வைத்தியசாலையில் மக்கள் அவதி

wpengine