பிரதான செய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை! உதாசீனம் செய்யும் தழிழ்,சிங்கள அரச அதிகாரிகள்

( ஏ. எச். எம்.பூமுதீன் )

இலங்கை குண்டு வெடிப்பை அடுத்து முஸ்லிம் சமுகம் மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
அதிலும் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சவால் மிக ஆபத்தாக உள்ளது.

முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் அரசு பல சுற்றறிக்கைகளை வெளியிட்டபோதிலும் அவை உதாசீனமே செய்யப்படுகின்றது.

சிங்கள மற்றும் தமிழ் அரச அதிகாரிகளும் பொறுப்புமிக்கவர்களும் வெளிப்படையாகவே அவற்றை மீறுவதுடன் சட்டத்தையும் தம் இஷ்டம்போல் கையிலெடுத்துக் கொண்டுள்ளனர்.

புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இழைக்கப்பட்டது ஓர் அப்பட்டமான இன, மத வெறி தாக்குதல் மட்டுமன்றி அடிப்படை மனித உரிமை மீறலுமாகும்.

அதையும் விட மோசமான நிகழ்வு அளுத்கம அரச வைத்தியசாலை ஒன்றில் நோயாளியான முஸ்லிம் பெண்ணுக்கு இழைக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு முன்னுரிமை வழங்காமல், அப்பெண்ணிண் ஹபாயாவை கழட்டி விடுவதில் பெண் டாக்டர் ஒருவரே அதிக முனைப்புக் காட்டுவது அவர் உண்மையில் ஒரு டாக்டரா என்பதை கேள்விக்குட்படுத்துவதுடன் அவரின் உச்சபட்ச அயோக்கியத்தனத்தையும் புடம்போட்டுக் காட்டுகின்றது. ( வீடியோ ஆதாரம் இணைப்பு)

கல்முனை கார்மேல் பாத்திமா கிறிஸ்தவ கல்லூரியிலும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.சில பெற்றோர் துவேஷ கருத்துக்களை கூறி பாடசாலைக்குள் முஸ்லிம் ஆசிரியைகள் ஸ்காப் அணிந்து செல்ல தடை ஏற்படுத்தி வேறு பாடசாலைகளுக்கு மாற்றலாகி செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்று இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் முஸ்லிம் மாணவிகளை இஸ்லாமிய ஆடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அநீதி ஆங்காங்கே இடம்பெற்ற வண்ணமேயுள்ளது.

எங்கேயோ நாசமாப்போய்க் கிடந்த ஸஹ்ரானாலையும் ஹரவாப்போன இப்ராஹிமின் புதல்வர்களாலையும் முழு முஸ்லிம் சமுகமும் மிகப்பெரும் ஆபத்தையும் அச்சுறுத்தலையும் இன்று எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது.

இந்த காட்டுமிராண்டிகளுக்காக – தம்மோடு நீண்ட காலமாக உறவாடிய , பக்கத்து ஆசனத்தில் அமர்ந்து பணியாற்றிய முஸ்லிம்களை குறிப்பாக முஸ்லிம் பெண்களை சந்தேக கண்கொண்டு நோக்குவதுதான் இன்று முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலைக்குரிய விடயமாகும்.

விடுதலைப் புலிகள் காலத்தில் ஆசிரியை என்ற தோற்றத்திலும் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுதான். அதற்காக எந்தவொரு தமிழ் சமுக ஆசிரியையையும் முஸ்லிம் சமுகம் சந்தேகம் கண்கொண்டு பார்த்ததா? முஸ்லிம் பாடசாலைக்குள் வரவேண்டாம் என தடுத்தனரா? கிஞ்சித்தும் இல்லையே !.
அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் சிங்கள சமுகத்தினருடன் இணைந்து கச்சிதமாக செய்திருக்க முடிந்திருக்கும்.

சிங்கள மற்றும் தமிழ் அதிகாரிகளும் பொறுப்புமிக்கவர்களும்தான் இப்படியென்றால் முஸ்லிம் சமுகம் பெரிதும் நம்பிய அமைச்சர் மனோ கணேசன் – இன,மதவெறியர்களின் தந்தை போன்று செயற்படுவது முழு முஸ்லிம்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

புவக்பிட்டி விவகாரத்தில் அமைச்சர் மனோ , அப்பட்டமான பொய்யைக் கூறி தனது கொழும்பு மாவட்ட வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கண கச்சிதமாக துவேஷத்தை அள்ளிக் கொட்டியுள்ளார். உப்புச்சப்பற்ற அவரது அறிக்கை முஸ்லிம்களை மடையர்களாக நினைக்கிறாரா என்ற கேள்வியை தொடுக்க தோன்றுகிறது.
அவர் மட்டும்தான் அறிவாளி மற்றவர்கள் மொக்கர் கூட்டம் என்றா அமைச்சர் மனோ நினைக்கிறார்.

ஆக, முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசரமாகியுள்ளது.
பிரச்சினைக்கு தீர்வு முஸ்லிம் ஆசிரியைகளை இடமாற்றுவதல்ல. இவ்வாறு இடமாற்றம் வழங்கிக் கொண்டே போனால் முழு முஸ்லிம் ஆசிரியைகளையும் இறுதியில் கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில்தான் குவிக்க வேண்டிவரும்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள், உலமா சபை இந்த விடயத்தில் அவசர தீர்மானம் ஒன்றை எடுத்து அரசின் ஊடாக தீர்க்காமல் விட்டால் எதிர்காலத்தில் ஏற்படும் அத்தனை ஆபத்துக்களுக்கும் நீங்களே பொறுப்புக் கூற வேண்டி வரும். கவனம் …..

Related posts

மருதங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தரின் நியாயமற்ற இடமாற்றம்

wpengine

South-East University’s Oluvil – Colombo Academic and practical programme new building opened today at Mount Lavniya

wpengine

மன்னார்- உயிலங்குளம் Gas வினியோகத்தில் மோசடி பலர் விசனம்

wpengine