ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த எதிர்ப்பு காரணமாக நேற்று 03 வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த புதிய பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.
தற்போது வெலிமடை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வெலிமட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.
இப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றும் பாடசாலை விஸ்தரிப்புக்கான காணி போதாமை போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு மாகாண கல்வி அமைச்சு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்ப பாடசாலையை வேறொரு இடத்தில் அமைக்க முடிவு எடுத்திருந்தது.
அடிக்கல் நாட்டு விழாவுக்கு பௌத்த பிக்குமார்கள் எதிர்ப்பு
சுமார் 2 கோடி ரூபாய் செலவில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பாடசாலைக் கட்டிடத்திற்கான வேலைகளை மாகாண முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான சமர சம்பத் தஸநாயக்கா அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கவிருந்தார்.
புதிதாக அமையவுள்ள பாடசாலை அரபு பாடசாலை என பௌத்த கடும் போக்காளர்கள் புரளியை கிளப்பி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த பகுதியில் இரவோடு இரவாக சுவரொட்டிகளையும் ஓட்டியள்ளதாக கூறுகிறார் மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவரான ஏ.எம். எம். முஸாம்பில்.
பாடசாலை அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ள மாகாண கல்வி அமைச்சுக்குரிய காணிக்கு முன்பாக பௌத்த பிக்குமார்கள் உட்பட கடும் போக்குடைய பௌத்தர்கள் நேற்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
”இரு வார காலத்திற்குள் கட்டிட வேலை ஆரம்பிக்கப்படும்”
இந்நிகழ்வு இறுதி நேரத்தில் கைவிடப்பட்ட நிலையில் சுமூகமான தீர்வொன்றை காணும் வகையில் மாகாண முதலமைச்சரால் வெலிமடை கல்வி அலுவலகத்தில் அவசர கூட்டமொன்று கூட்டப்பட்டது. எதிர்ப்பு தெரிவிக்கும் பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த பாடசாலை முஸ்லிம்களின் அரபுக் கல்லூரியோ அல்லது மத்ரஸாவோ அல்ல என மாகாண பாடசாலை என முதலமைச்சரால் விளக்கமளிக்கப்பட்ட போதிலும் அதனை எதிர்ப்பாளர்கள் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் இரு வார காலத்திற்குள் பாடசாலையின் கட்டிட வேலைகள் தன்னால் ஆரம்பித்து வைக்கப்படும் என முதலமைச்சரால் அவ்வேளை உறுதிபட தெரிவிக்கப்பட்டதாக மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவரான ஏ.எம். எம். முஸாம்பில் தெரிவித்தார்.