(ஊடகப்பிரிவு)
மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து வேணடுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும் பொலிஸ் திணைக்களமும் அதனைச் செய்வதை விடுத்து, கடை எரிப்பு சம்பவங்கள் இடம் பெறும் போதெல்லாம் அதற்கு வேறு வியாக்கியானம் கூறி வருவது கேவலமானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மகியங்கனையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனம் ஒன்று எரிந்து கொண்டிருக்கும் போதே, அந்தப் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு சம்பவத்தைத் தான் எடுத்துரைத்த போது “வயர் சோட்டாய் இருக்கலாம்” என்று அந்த அதிகாரி பதிலளிக்கின்றார்.
கடந்த வாரம் மஹரகமையில் முஸ்லிம் ஒருவரின் கடை எரிந்த போதும் அங்குள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி இதே போன்றதொரு பொறுப்பற்ற பதிலைத்தான் கூறினார்.
தொடர்ச்சியாக 2 மாதங்களாக முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிறுவனங்கள் எரிந்து சாம்பராகிக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாயல்கள் பெற்றோல் குண்டுகளால் தாக்கப்படுகின்றன. அதுவும் நள்ளிரவிலும் நடு நிசியிலும் மிகவும் திட்டமிட்டு இந்த அராஜகங்களை இனவாதிகள் புரிந்து கொண்டிருக்கும் போது சிறுபான்மைச் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பொலிசார் சட்டத்தை கையிலெடுக்காமல் சாக்குப் போக்குச் சொல்லித் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு தான் நாங்கள் உரத்துச் சொன்னாலும் அவர்களுக்கு உறைப்பதாக இல்லை. அரசாங்கமும் இற்றை வரை காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி அரசியல் நீதியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
கடைகள் எரிந்து கொண்டிருக்கும் போது விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரேயே இப்படித்தான் ஏற்பட்டதென பொலிசார் கூறுவது இந்த நாட்டிலேயே நடக்கின்றது. மகியங்கனையில் கடை எரிந்த சமயம் இரண்டு பொலிசார் அந்தக் கடைக்கு முன்னாலேயே நின்று கொண்டுமிருந்தனரென அங்குள்ளவர்கள் மக்கள் தெரிவிகின்றனர். நுகேகொடை கடைகளை தான் தான் எரித்ததாக முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இப்போது ஒப்புக் கொண்டிருக்கின்றார். எனவே பொலிசார் பொறுப்பற்ற பேச்சுக்களை நிறுத்தி தீய சக்திகளை கண்டு பிடித்து ச ட்டத்தின் முன் கொண்டு வரா விட்டால் நாட்டில் விபரீத விளைவுகளே ஏற்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.