முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நாட்டில் இயங்கி வந்த 435 நலன்புரி சங்கங்கள் மற்றும் இயக்கங்களின் பதிவுகளை முஸ்லிம் கலாசார திணைக்களம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நலன்புரி சங்கங்களின் பதிவுகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 24ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் அனைத்து அமைப்புகளுக்கும் இந்த அறிவித்தல் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.
அதனால் 435 அமைப்புகளுக்கும் மீண்டும் பதிவுத்தபால் மூலம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமைப்புகளின் தலைவர் / செயலாளர்களுக்கு திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரபினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இரத்து செய்யப்பட்டுள்ள அமைப்புகள் எமது திணைக்களத்தின் பதிவு இலக்கத்தினை பயன்படுத்துவது சட்ட விரோதமாக கருதப்படும்.
மீறி பதிவு இலக்கத்தை பயன்படுத்துவது தெரியவருமிடத்து தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் எமது திணைக்களத்தின் பதிவு இலக்கத்தினை உங்கள் அமைப்பின் அல்லது சங்கத்தின் கடிதத் தலைப்பு அல்லது வங்கிக் கணக்கு போன்றவற்றிலிருந்து நீக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உங்கள் அமைப்பு வேறு ஒரு அரச நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அது தொடர்பான விபரங்களை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.