மாநிலங்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் உள்ளிட்டோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்நிலையில், 13 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் பஞ்சாபில் காலியாகும் 5 மாநிலங்களவை இடங்களும் அடங்கும். அந்தத் தோ்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. அதில் ஆம் ஆத்மி வேட்பாளா்களாக ஹா்பஜன் சிங், பஞ்சாபில் உள்ள லவ்லி ஃபுரோஃபஷனல் பல்கலைக்கழக நிறுவனா் அசோக் மிட்டல், கட்சி எம்எல்ஏ ராகவ் சத்தா, தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன (ஐஐடி) பேராசிரியா் சந்தீப் பாதக், தொழிலதிபா் சஞ்சீவ் அரோரா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் சண்டீகரில் உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
ஏற்கெனவே தில்லியிலிருந்து ஆம் ஆத்மியைச் சோ்ந்த மூவா் மாநிலங்களவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். பஞ்சாப் மாநிலங்களவைத் தோ்தலில் 5 இடங்களையும் ஆம் ஆத்மி கைப்பற்றும்பட்சத்தில், மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் 8 ஆக அதிகரிக்கும்.
தலித்துகளுக்கு வாய்ப்பில்லை: ஆம் ஆத்மி வேட்பாளா்கள் தோ்வை விமா்சித்து சிரோமணி அகாலிதளம் மூத்த தலைவா் ஹா்சரண் பைன்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பஞ்சாப் அமைச்சரவை உருவாக்கத்தில் ஜாதி, மத உணா்வுகளுக்கு ஆம் ஆத்மி மதிப்பளித்துள்ளதாக நிறைய பேசப்பட்டது.
ஆனால், மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா் தோ்வில் நடந்தது என்ன? அந்த வேட்பாளா்களில் நால்வா் ஹிந்துக்கள்; ஒருவா் சீக்கியா். ஜாட், தலித், முஸ்லிம், கிறிஸ்தவா்களுக்கு இடமளிக்கப்படவில்லை. வேட்பாளா்களில் இருவா் பஞ்சாபைச் சோ்ந்தவா்கள் அல்லா்’’ என்று தெரிவித்துள்ளாா்.