(அபூ செய்னப்)
கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்களை கண்காணித்து ஆலோசனை வழங்கும் குழுவின் தலைவராக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் செய்யது அலி சாஹிர் மெளலானா தெரிவு செய்யப்பட்டது தொடர்பில் வினவப்பட்ட போதே, இது ஆலோசனைக்கான தலைமைதானே தவிர அதிகாரத்திற்கான தலைமையல்ல.
இது ஒரு சாதாரண விடயம் இந்த சாதாரண விடயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்;
முன்னர் பெரும்பாலும் அமைச்சுக்கு சொந்தமான அமைச்சரே அந்த அமைச்சின் ஆலோசனை சபை தலைவராக நியமிக்கப்பட்டிருந்தனர், ஆனால் இந்த நல்லாட்சியில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது அதாவது நல்லாட்சியின் கீழ் பதவிகள் கிடைக்காத பாராளுமன்ற உறுப்பினர்களை கெளரவிக்கும் நோக்கில் அவர்களுக்கு அமைச்சுக்களுக்கான ஆலோசனைக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்கு மட்டுமல்ல பொதுவாக எல்லா அமைச்சுக்களுக்கும் இவ்வாறு ஆலோசனைக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறே அமைச்சர் ரவூப் ஹகீமின் அமைச்சுக்கான மேற்பார்வை,மற்றும் ஆலோசனைக்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அநுர சிட்னி ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்படியாயின் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலாவிடம் என சொல்லுகின்றவர்கள் கெளரவ அமைச்சர் ரவூப் ஹகீமின் அமைச்சின் அதிகாரம் முழுதும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர சிட்னி ஜயரத்ன வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
எனவே இதில் வெறுமனே ஆலோசனைகளை மட்டும் வழங்க நியமிக்கபட்டுள்ளவர்களை அதிகாரங்கொண்டவர்களாக காட்ட முனைவது கபடத்தனமான போக்காகவே கருத முடியும். இந்த பதவிகள் மூலம் யாரும் யாருடைய அதிகாரத்தையும் பறிக்க முடியாது என்பதே உண்மை.
நண்பர் அலி சாஹிர் மெளலானாவிற்கு இது விடயத்தில் தெளிவு இருக்கும் என நினைக்கிறேன்.
தனது பிரதேசத்திற்கு தண்ணீர் கேட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினரை, தலைவரோடு ஒன்றாக வைத்து புகைப்படம் எடுத்து அவர் தமது கட்சியில் சேர்ந்து விட்டார் என்று பொய்யான பரப்புரைகளை கட்டவிழ்த்துவிடுகின்ற சிறுபிள்ளைத்தனமான, அநாகரிகமான செயற்பாடுகளின் மூலம் அரசியல் செய்ய முனைகின்ற அந்தக்கட்சியின் பரிதாபகரமான நிலை எனக்கு கவலை அளிக்கிறது. எனக்கூறினார்.