கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் இருப்பை தக்க வைத்துக்கொள்ள கிழக்கு மக்களை மடையர்களாகவும், குருடர்களாகவும் ஆக்கி வருகின்றது

(எஸ். ஸஜாத் முஹம்மத்)

கரையோர மாவட்டம் என்பது முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மாயையாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் கால, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தமது இருப்பை தக்கவைப்பதற்காக பல கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மக்களை மடையர்களாகவும், குருடர்களாகவும் ஆக்கிவந்துள்ளது. ஆக்கி வருகின்றது.

தழிழ் தரப்பு இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டமாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த போது அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் காங்கிரஸ் மேலெழுந்தவாரியாக தமது கோரிக்கைகளை காலத்திற்கு காலம் பல வடிவில் முன்வைத்து வருகின்றது.

அந்த வகையில் ‘இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்குள் முஸ்லிம்களுக்கான ஒரு நிர்வாக அலகு’, ‘தென்கிழக்கு அதிகார அலகு’, கரையோர மாவட்டக் கோரிக்கை என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

கரையோர மாவட்டம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்படும் கோரிக்கை இனத் தேசிய வாதத்தின் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றது. இது முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலுக்கான நிரந்தர தீர்வாக ஒருகாலமும் அமையப்போவதில்லை.

அவ்வாறு கரையோர மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட்டால் அது கிழக்கு முஸ்லிம்களை தேசிய சமூக நீரோட்டத்திலிருந்து பிரிக்கும் முயற்சியாகவே இருக்கும். கிழக்குக்கு வெளியில் சிதறுன்டு வாழும் முஸ்லிம்களுக்கும் பாதகமாகவே அமையும்.

இந்தியாவில் ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அபிவிருத்தி பணியில் புறக்கணிக்கப்பட்டது போல் கரையோர மாவட்டமும் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கும்.

பல்லாயிரம் உயிர்களை பலி கொடுத்த தனிநாட்டுக் கோரிக்கையில் தமிழ் தரப்பு தோல்வியடைந்துள்ளது. தற்போது சமஸ்டி முறையிலான தீர்வுத்திட்டத்திலும் நம்பிக்கை இழந்து இருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதம் கட்சி, நிர்வாக மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்டு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயற்படுகின்றது. சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இலக்காக கொண்டு குடியேற்றத் திட்டங்கள் பலதும் மேற்கொள்ளப்படுகின்றது. பெளத்த தலைமைபீடங்களும் அன்று முஸ்லிம்களுக்கு சார்பாக பேசியவர்களும் பேரினவாதத்திற்கு நியாயம் கற்பிக்கின்ற போக்கும் தற்போது காணப்படுகின்றது.

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால் முஸ்லிம்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகம் தமது வாக்கு வங்கியில் இருந்து 95 வீதமான பகுதியை அன்று தாரைவாத்தது. ஆனால் இன்று வரை அந்த விடிவின் ஒரு ஒளிக்கீற்றையாவது எம்மால் காணமுடியாதுள்ளது.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அன்று முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாகச் செயற்பட்டது. இன்று நல்லாட்சி அரசாங்கம் என தன்னைக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் சர்வதேச நாசகார சக்திகளுடன் ஒன்றிணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுகமாக செயற்படுகின்றது.

இவ்வாறான காலப்பகுதியில் கரையோர மாவட்ட கோரிக்கை என்பது வெறும் புஸ்வானமாகும்.

மாயையாக முஸ்லிம் காங்கிரஸினால் அடையாளப்படுத்தப்பட்ட கரையோர மாவட்ட கோரிக்கையின் அமைவிடம் தொடர்பாக பிரதேச ரீதியாக உரிமம் கோறும் விவாதங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் இடம்பெறுகின்றன. இதில் தம்மை பிரபலங்களாக அடையாளப்படுத்துவதற்காக சிலர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி மோடத்தனமாக பிரதேசவாதத்தை தூண்டும் வகையில் பதிவுகளை இட்டு மக்களையும் பிழையான வழியில் நடத்த முயற்சிக்கின்றனர்.

இவர்களின் விவாதங்கள் கடைசிக் கிழாபாவான உஸ்மானிய கிழாபா விழ்ச்சியடைகின்ற காலத்தில் இருந்த உலமாக்களின் சிலரால் நிகழ்த்திய “ஊசியின் ஓட்டைக்குள் யானை நுழையுமா” என்ற விவாதத்திற்கு ஒப்பானதாக இருக்கின்றது.

கிழக்கு மாகாண மக்களாகிய நாம் எந்த விடையத்தையும் எடுத்தாலும் இன, அரசியல், பிரதேச ரீதியாக சிந்திப்பதற்கு பழக்கப்பட்டிருக்கின்றோம் அல்லது தூண்டப்பட்டுள்ளோம் அல்லது இவ்வாறு தான் நீங்கள் சிந்திக்க வேண்டும் என திணிக்கப்பட்டுள்ளோம்.

எமது ஆன்மீகம், கல்வி, சுகாதாரம், சமூகப் பொருளாதாரம், அரசியல், தலைமைதாங்குதல், சமூகப்பணி, வரலாறு மற்றும் சகவாழ்வு ஆகிய சமூக வாழ்வியல் துறைகளில் இதன் வியாபகம் புற்றுநோயாய் பரவிக் காணப்படுகின்றது. இதனால் இத்துறைகளின் வளர்ச்சி என்பது வெறும் கண்துடைப்பாகவுள்ளது. இதனால் இஸ்லாம் வழியுறுத்தும் “ஜமாஆ” எனும் ஒன்றிணைந்த சமூக அபிவிருத்திக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகின்றது.

ஒரு சமூகத்தின் வாழ்வியலுக்கு தூண்களாக சிவில் சமூக அமைப்புக்கள் காணப்படுகின்றன. ஏதாவதொரு அல்லது பல பொது நோக்கை அடைந்து கொள்ளும் நோக்கில் ஒன்றிணைந்த குழுமத்தை சிவில் சமூகம் என்று அழைப்பார்கள் ஆனால் ஒன்றிணைந்த மாகாண, மாவட்ட, பிராந்திய, பிரதேச அல்லது கிராம மட்டங்களினால் வினைத்திறனான, விளைத்திறனான செயற்பாடுகளை காண்பது அறிதாகத்தான் உள்ளது எமது பகுதிகளில். அவ்வாறான முயற்சிகள் ஒரிரு செயற்பாடுகளில் அல்லது கூட்டங்களில் தளிர் விடுவதற்கு முன்னர் வாடிப் போகின்றன. அல்லது அரசியல் ரீதியாக உரிமம் கோரப்படுகின்றன.

இன, அரசியல், பிரதேச ரீதியான இந்த சிந்தனைப் போக்கின் தோற்றம், அதன் வளர்ச்சி, வியாபகம், அதற்காக உரம் போட்ட முகாங்கள் தொடர்பாக ஆய்வுகளும் முன்மொழிவுகளும் காலத்தின் தேவையாக உள்ளது. இதன் பெறுபேறுகளை கொண்டும் இஸ்லாமிய கோட்பாடுகள், பெறுமானங்கள், விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டும் இலங்கை சூழலுக்கு ஏற்ற வகையில் எமது சமூக வாழ்வியல் மாற்றியமைக்கப்பட வேண்டும். அல்லது மீள் கட்டமைக்கப்பட வேண்டும்.

 

Related posts

பாரிய முதலையினை பிடித்த முஸ்லிம்கள்

wpengine

மொஹமட் ஷாபி 20 ஆம் திகதிக்கு முன்னர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம்

wpengine

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சர் றிஷாட்

wpengine