Breaking
Sun. Nov 24th, 2024
(முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது)  

ஒரு சமூகத்துக்கெதிராக பாரியளவில் இனச்சுத்திகரிப்பினை மேற்கொள்வதாக இருந்தால், அதற்காக நூற்றுக்கணக்கான இளைஞ்சர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். அதனை சில மணித்தியாலங்களில் செய்து முடிக்க முடியாது. நீண்டகால திட்டமிடலுடன் பலமுள்ள சக்திகள் பின்னணி வகிக்கவேண்டும்.

இந்த ஏற்பாடுகள் அரச புலனாய்வு துறையினர்களின் செவிகளுக்கு எட்டாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் புலிகள் இயக்கத்தின் இரகசிய நகர்வுகளை அவதானித்த இலங்கை புலனாய்வுத் துறையினர்கள் இந்த விடயத்தினை மோப்பம் பிடிக்காமல் இருந்திருப்பார்களா ?

கடந்த 27.02.2018 அன்று இரவு அம்பாறையில் உள்ள ஹோட்டலில் கொத்துரொட்டிக்குள் கருத்தடை மருந்தினை கலந்ததாக கூறி நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞ்சர்கள் திரண்டுவந்து குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்த ஹோட்டல்கள், வாகனங்கள் உட்பட பள்ளிவாசலையும் உடைத்தார்கள்.

இது முஸ்லிம்களின் தாயகமாக கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட இருந்த பாரியளவிலான இனச்சுத்திகரிப்புக்கான ஆரம்பமாகும்.

ஆனால் கருத்தடை மாத்திரை விவகாரம் சாத்தியமற்றது என்று சிங்கள வைத்திய நிபுணர்கள் அறிக்கைவிட்டதனால் அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட காடைத்தனம் தோல்விகண்ட நிலையில்தான் போராட்டத்தின் இலக்கு திசைதிருப்பப்பட்டது.

நான்கு முஸ்லிம் இளைஞ்சர்களால் சிங்கள நபர் தாக்கப்பட்டு ஒருவாரத்துக்கு பின்புதான் அம்பாறையில் வன்முறை ஆரம்பிக்கப்பட்டது.

சிங்கள இளைஞ்சர் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது ஆத்திரத்தினால் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

சிகிச்சையில் முன்னேற்றம் கண்டுவந்த நிலையில் மரணித்ததானது, அம்பாறையில் தோல்வியடைந்த இனச்சுத்திகரிப்பினை கண்டி மாவட்டத்தில் வெற்றியடைய செய்வதற்காக சிங்கள இளைஞ்சன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகின்றது.

அதிலும் பிரேதப் பரிசோதனை (Postmortem) செய்யப்படுகின்ற உடலை ஒருபோதும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் குறித்த சிங்கள இளைஞ்சனின் பிரேதப் பரிசோதனையின்போது பிளக்கப்பட்ட விகாரமான உடலை வேண்டுமென்று ஒளிப்பதிவு செய்து சிங்கள மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதனைக்காக வைத்தியர்களால் பிளக்கப்பட்டதை முஸ்லிம் இளைஞ்சர்களினால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடல் என்றே சிங்களவர்கள் மத்தியில் பிரச்சாரம் மேட்கொள்ளப்பட்டது. இதனால் எதிர்பார்த்ததனையும்விட அதிகமான சிங்கள இளைஞ்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆவேசத்துடன் ஒன்றுதிரண்டனர்.

சிங்கள இளைஞ்சன் கொல்லப்பட்டதிலிருந்து அடக்கம் செய்யப்பட்ட 05.03.2018 திகதி வரைக்கும் உள்ள காலத்தில் இந்த பிரச்சாரத்தினை மேற்கொண்டதுடன், வன்முறைக்கு தேவையான நிதி, வாகனம், தங்குமிடம், ஆடைகள், உணவுகள் விநியோகம் என அனைத்து ஏற்பாடுகளும் பேரினவாதிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டபோது அரச புலனாய்வுத் துறையினர்கள் என்ன செய்தார்கள் ?

எனவே சிங்கள இளைஞ்சனை துரும்பாக பாவித்து அம்பாறையில் தோல்வி அடைந்ததனை கண்டி மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் மீது காடைத்தனத்தினை அமுல்படுத்துவதில் சிங்கள பேரினவாதம் வெற்றிகண்டுள்ளது. அத்துடன் இந்த வன்முறையினால் நாட்டின் ஏனைய பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அச்சத்தினையும், எதிர்கால பாதுகாப்பு பற்றிய கவலையையும் உருவாக்கியுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *