உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும், முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏற்பட விருந்த பேராபத்தை தவிர்க்கும் வகையில் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தங்களது பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாட்டினதும், சமூகத்தினதும் பாதுகாப்பைக் கருதி தமது பதவிகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாடு குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் என பொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தி இருக்கின்றது.
அது மாத்திரமின்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரின் அறிவிப்பும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் தெரிவுக்குழுவில் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பூரண விளக்கமளித்துள்ளதோடு தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்தவர்களும் ரிஷாட் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.
இது தேசியத்தில் ஒரு புதிய மாற்றத்தையும் தெளிவையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகள், உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கள், பள்ளிவாசல்கள், அரபுக் கலாசாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடனும் சிரத்தையுடனும் எனது தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட்டு வந்தனர்.
தொடர்ச்சியாக ஜனாதிபதி, பிரதமருடன் நடத்தப்பட்ட பலச் சுற்று பேச்சுவார்த்தைகளின் விளைவாக நல்ல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பின் பயனாக வன்செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வேலைத்திட்டம் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.
ஆவணங்கள் சரி செய்யப்பட்ட பின் இன்னும் இரண்டு வார காலத்தில் குருநாகல் பிரதேச பாதிப்புக்களுக்கான நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேற்படி, நஷ்ட ஈடு வழங்கும் வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பை பிரதமரின் வேண்டுகோளின் பேரில் பௌசியின் தலைமையில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் தொடர்ந்தேர்ச்சியாக கண்காணிப்பதற்கும் அவசரமாக செயற்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் ஷாபி உட்பட அப்பாவி இளைஞர்களின் முறைகேடான கைதுகளும் முடிவுக்கு கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை மீண்டும் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்த போதும் பிரதமருடன் சில உறுதி மொழிகளை பெற வேண்டியதன் அடிப்படையில் அவ்விடயங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
எனவே, காலத்தை தாமத்திக்காது அமைச்சு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.