Breaking
Sat. Nov 23rd, 2024

வடக்கும், கிழக்கும் விக்னேஸ்வரனின் தந்தை வழி சொத்தல்ல என உலமா கட்சி தலைவரான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிழக்கு மக்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை விரும்பவில்லை என பகிரங்கமாக தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்முனையில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்றுமுன் தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் வட மாகாண முதலமைச்சர் அடிக்கடி தான் தோன்றித்தனமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

வடக்கும், கிழக்கும் விக்னேஸ்வரனின் தந்தை வழி சொத்தல்ல. இங்கு பல இனத்தவர்கள் வாழ்கின்றனர். குறிப்பாக கிழக்கு மக்கள் இணைப்பை
விரும்பவில்லை என பகிரங்கமாக தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலும் இந்தியாவின் அழுத்தத்தை கோருவது விக்னேஸ்வரனின் மேலாதிக்கத்தை காட்டுகிறது.

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களும் இணங்கினாலேயே தலையிட முடியும் என சில வருடங்களுக்கு முன் இந்தியா தெளிவாக தெரிவித்திருந்தது.
இந்தியாவிடம் அழுத்தத்தை கோருவது முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக விக்னேஸ்வரன் நினைத்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

ஆகவே வட மாகாண முதல்வர் தமிழர்களுக்கு மட்டும் முதல்வர் என நினைத்துக்கொண்டிருப்பதன் மூலம் தன்னை இனவாதியாக தொடர்ந்தும் காட்டிக்கொண்டிருப்பது படித்த மனிதருக்கு அழகானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *