கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம்களை ஏமாற்றுவதனால் தனது புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் அரசாங்கம்.

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

பௌத்த தீவிரவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஜானசார தேரர் அவர்களை கைது செய்யும் பொருட்டு விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த இரண்டு வாரங்களாக செய்திகள் வெளிவருகின்றது.

ஒரு குற்றவாளியை கைது செய்வதென்றால், அந்த குற்றவாளி இருக்கும் இடங்களை சந்தேகித்து அங்குமிங்கும் பொலிசார் அலைந்துதிரிய வேண்டிய அவசியமில்லை. மாறாக அவர் எங்கே இருக்கின்றார் என்ற புலனாய்வுத் தகவல்களை முதலில் பெற்றுக்கொண்டதன் பின்பே அவர் இருக்கின்ற இடத்துக்கு பொலிசாரை அனுப்பி குற்றவாளியை கைதுசெய்ய வேண்டும். இதுதான் உலக நடைமுறையாகும்.

ஆனால் பல பொலிஸ் படைகளை அமைத்துள்ளதாகவும், ஜானசாரவை போலீசார் வலைவிரித்து தேடி வருவதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்பட்டு விடுவார் என்ற செய்தியை ஊடகங்கள் மூலமாக அரசாங்கம் கசியவிட்டு முஸ்லிம்களை திருப்திபடுத்த நினைக்கின்றது.

இந்த செய்தியானது இலங்கையின் பலம் பொருந்திய புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்துவதாக அமைகின்றது. அதாவது ஜானசார தேரரை தாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருப்பதாக முஸ்லிம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கையில், மறுபுறத்தில் அது தங்களது புலனாய்வுத்துறையை பலயீனமானதொரு தோற்றப்பாட்டினை உலகுக்கு காண்பிக்கின்றது என்பதனை அரசாங்கம் உணர்ந்துகொள்ள தவறிவிட்டது.

இலங்கை புலனாய்வுத் துறையை பொறுத்தவரையில், கருணாவின் வெளியேற்றத்துக்கு முன்பு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகளின் கட்டமைப்பு பற்றி யாராலும் அறிந்திராத புலனாய்வுத் தகவல்களை பெற்றுக் கொண்டதுடன், இலகுவில் ஊடுருவ முடியாத அவர்களது பிரதேசத்தில் ஆழ ஊடுருவும் அணியினரை அனுப்பி புலிகளின் கட்டமைப்பினை சிதைக்க முற்பட்டது.

அந்தவகையில் புலிகளினால் மிகவும் இரகசியமாக பேணிவந்த புலிகளின் வான்படை பற்றிய முழு தகவல்களையும் பெற்றுக் கொண்டதுடன், அதன் தளபதியான சங்கர் உட்பட புலிகளின் முக்கிய தளபதிகளை அழிப்பதில் ஆழ ஊடுருவும் அணிக்கு துல்லியமான தகவல்களை வழங்கி புலனாய்வுத் துறையினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள்.

அத்துடன் ராஜீவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்பதனால் சர்வதேச பொலிசாரினால் (இன்டர்போல்) வலைவிரித்து தேடப்பட்டுவந்த புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் என்பவர், போலி கடவுச்சீட்டுக்களை கொண்டு பலவகையான பெயர்களுடன் சர்வதேசரீதியில் நடமாடி புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்தார்.

சர்வதேச பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியாத குமரன் பத்மநாதனை இலங்கை புலனாய்வுத் துறையினர்கள் கண்டுபிடித்து அவரை மலேசியாவில் வைத்து கைதுசெய்து இலங்கைக்கு கடத்தி வந்தார்கள்.

இது மட்டுமல்ல எத்தனையோ ஏராளமான அபூர்வ சாதனைகள் புரிந்த இலங்கை புலனாய்வுத் துறைக்கு ஒரு சாதாரண பௌத்த பிக்கு ஒருவர் எங்கே ஒளிந்து இருக்கின்றார் என்ற தகவல்கள் தெரியாமல் போனதன் மர்மம் என்ன?

விடயம் இதுதான். அதாவது ஜனசார தேரர் எங்கே இருக்கின்றார் என்பது பற்றிய தகவல்கள் அரசாங்கத்துக்கு தெரியாமலில்லை. ஊடகங்கள் முன்பாக தோன்றுகின்றபோதுதான் அவர் பகிரங்கமாக நடமாடுவதாக நாங்கள் கருதுவோம். ஆனால் ஊடகங்களுக்கு தலைகட்டாவிட்டால் அவர் ஒளிந்திருப்பதாகவே எங்களுக்கு எண்ணத்தோன்றும். இந்த எண்ணத்தையே முஸ்லிம்களின் மனதில் பதியவிட்டு அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றது.

சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட ஜானசார தேரர் அவர்கள், காடுகளிலோ, மலைப்புதர்களிலோ, கருந்தடிகளிலோ ஒழிந்துகொண்டு கரடுமுறடான வாழ்வினை வாழ தெரியாதவர்.

எனவே ஊடகங்களுக்கு தலையைக் காட்டாது அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தனது வழமையான சொகுசு வாழ்வினை வாழ்ந்து வருகின்றார். இதனால் ஜானசார தேரர் ஒளிந்துகொண்டிருப்பதாக முஸ்லிம்களை அரசாங்கம் ஏமாற்ற முயட்சிப்பதனால் இந்த நாட்டு புலனாய்வுத்துறை பலயீனமானது எனற தோற்றப்பாடு அரசாங்கத்தினால் கான்பிக்கபடுகின்றது.

Related posts

உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப்பின் மணி விழா

wpengine

முன்னால் அமைச்சர் உளறி வருகின்றார்! வடக்கு,கிழக்கில் தனித்து போட்டி அமைச்சர் ஹக்கீம்

wpengine

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம்

wpengine