Breaking
Sun. Nov 24th, 2024

ஊடகப்பிரிவு-

புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை, அரசாங்கம் கைவிடுவதாகத் தெரியவில்லை. ஆட்சிக்கு வர உதவிய இனவாதிகளைத் திருப்திப்படுத்தவே, இந்த நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்படுகின்றன. கொரோனாச் சூழ்நிலையில் முகக்கவசம், மூக்கை மறைத்தல் என்பன கடைப்பிடிக்கப்படும் காலமிது. இதைக் கூடப் புரிந்துகொள்ளாமல், முஸ்லிம்களைப் பழிவாங்கும் மனநிலையில்தான் இந்த அரசு நடந்துகொள்கிறது.

அரபு நாடுகளின் நண்பன் எனக் கூறும் இந்த அரசாங்கம், அரபு நாடுகளிலும் முஸ்லிம் உலகிலும் விரும்பப்படும் ஆடைகளுக்கு அடிப்படைவாதச் சாயம் பூசுவது, விந்தையும் வேடிக்கையாகவும் உள்ளது. ஒரு கலாசாரத்தின் நம்பிக்கையில் கை வைக்குமளவுக்கு அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகிறதே ஏன்? ஏனையோரின் நம்பிக்கைகளுக்கு இந்நாட்டில் இனி இடமில்லை என்றா எச்சரிக்கின்றனர்?

பயங்கரவாதம் கோலோச்சிய காலத்திலும், ஏன், இறுதிக்கட்ட யுத்தத்திலும் கூட, புர்கா மற்றும் ஹிஜாப் போன்ற முஸ்லிம்களின் கலாசார ஆடைகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை. இன்று, இதை அவசரமாகச் செய்யத் துணிவது பழிவாங்கலுக்காகவே.

சமூகங்கள் மீதான ஒடுக்கு முறைகளைத் தொடர்ந்துகொண்டு ஜெனீவாவில் எவ்வாறு வெல்ல முடியும்? தங்களுக்குப் பிடிக்காத ஒருசில அரசியல்வாதிகளைப் பழி தீர்ப்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கலாசார நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதா?

இந்தத் தடை வருமாக இருந்தால், முஸ்லிம் நாடுகளிலிருந்து மட்டுமல்ல, முகத்தை மறைக்கும் எந்தவொரு முஸ்லிம் பெண்ணும், உல்லாசப் பயணியாக இலங்கைக்கு வரப்போவதில்லை. எமது நாட்டின் சுற்றுலாத்துறையில் இது பாதிப்பை ஏற்படுத்தி, அந்நியச்செலாவணியில் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளல் அவசியம்.

ஒவ்வொரு விடியற்காலையிலும் ஏதோவொரு இடியோசைச் செய்தியையே முஸ்லிம்கள் கேட்க நேரிடுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *