Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத போதிலும், சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என தாதியர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறியுள்ளார்.
அனுராதபுர தாதியர் பாடசாலையில் இன்று இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சில வைத்தியசாலைகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அபாயா அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்களுக்கு வைத்தியம் செய்ய மறுத்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்தத் தற்கொலைச் சம்பவத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு சிலர் மாத்திரமே இந்த அநியாயத்தைச் செய்துள்ளனர். இப்படியொரு வேலையை இவர்கள் செய்வார்கள் என்று நாம் ஒருபோதும் நினைத்ததில்லை.

தனது குழந்தையைக் கூட கையில் வைத்துக்கொண்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவத்தை நாம் உலகில் எங்குமே கண்டதில்லை.
இஸ்லாம் தற்கொலையை எதிர்க்கின்றது. தற்கொலை செய்பவருக்கு நிரந்தர நரகம் என்று சொல்கிறது. நல்ல நோக்கத்துக்காகக்கூட தற்கொலை செய்ய முடியாது.

அதேபோல், ஓர் அப்பாவியைக் கொலை செய்தால் முழு சமூகத்தையுமே கொலை செய்ததற்குச் சமம் என்று இஸ்லாம் சொல்கிறது.

சஹ்றானின் மகளை இராணுவம் காப்பாற்றிய வேளையில் அவரது மகள் வாப்பா, வாப்பா என்று அழுதமையை நினைக்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது.

இப்படியான மிலேச்சத்தனமான தாக்குதல்களை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. முஸ்லிம்களில் ஒரு வீதத்தினர்கூட இதற்கு ஆதரவில்லை.

இந்தப் பயங்கரவாதிகளை பிடித்துக் கொடுப்பவர்கள் முஸ்லிம்கள்தான். அதனால்தான் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்க முடிந்துள்ளது.

இந்தப் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இனி இலங்கையில் எங்கும் குண்டு வெடிக்காது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும். நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும். இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடாது.

சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பல இனவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான சம்பவங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நோயாளிகள் யார் வந்தாலும் அவர்களுக்கு நீங்கள் வைத்தியம் செய்ய வேண்டும். சட்டத்தை மதித்துச் செயற்படுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *