வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற போது சீ.வீ. விக்னேஸ்வரன் தலைமையிலான அணி வெற்றிபெற வேண்டுமென கோஷம் எழுப்பியவர்களுள் நானும் ஒருவன். அப்போது நிறைவேற்றப்பட வேண்டிய எதிர்பார்ப்புக்கள் நிறைய இருந்தன. காலப்போக்கில் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் இனவாதம், இனத்துவேஷம் மிகைப்பட்டதை காண முடிந்தது.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட காரணமாகவும் அமைந்தது. நிதானப் போக்கை கடைப்பிடிக்கும் சம்பந்தன், மாவை, சுமந்திரன் உள்ளிட்டோரை வடக்கு மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் கைங்கரியத்தை விக்னேஸ்வரனும் அவரது அடிவருடிகளும் கனகச்சிதமாக முன்னெடுத்தனர்.
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கினையே கடைப்பிடித்து வரும் வட மாகாண சபை அவர்களது மீள்குடியேற்றத்தை தடுக்க தமது முயற்சிகளை மும்முரமாக முன்னெடுத்தனர்.
அரசாங்கம் வட மாகாண அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்த போது அதில் எதையும் செலவிடாததால் அது திரும்பிச்சென்ற சந்தர்ப்பத்தில் தமது அபிவிருத்திக்காக அரசு நிதியொதுக்குவதில்லை என இவர்கள் கொக்கரித்ததையும் மறக்க முடியாது.
தமது சுயலாபத்துக்காக அப்பாவி மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி அரசியல் நாடகமாடிய இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கியோர் பலர்.
இந்நிலையிலேயே, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையிலான உறுப்பினர்கள் ஆளுனரிடம் கையளித்துள்ளனர். இதன்மூலம் புதிய முதலமைச்சர் பதவியேற்றாலும் நான் மேற்சொன்ன குழறுபடிகளுக்கு விடிவு கிடைக்குமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதே.