Breaking
Tue. Nov 26th, 2024

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு ஒன்றை வழங்கி அவர்களின் விமோசனத்துக்காக நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று மாலை (25/08/2016) தெரிவித்தார்.

இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

காணாமல் போனோர் தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள சட்டம் காலத்திற்குத் தேவையான ஒன்றாகும். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையிலே, காணாமல் போனோரின் குடும்பங்கள் நாளாந்தம் படுகின்ற துன்பங்களையும், துயரங்களையும் நான் நேரில் கண்டுவருகின்றேன். பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பலமிழந்து பசி, பட்டினியுடன் மிகவும் வேதனையான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்தினால் வடக்கு, கிழக்கில் ஏராளமான விதவைகளும், அநாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளனர். காணாமல்போனோருக்கு மரண அத்தாட்சிப் பத்திரங்கள் பெற்றுக்கொள்வது மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது. இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று, இந்த உயர் சபையிலே நான் விநயமுடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்தச் சட்டமூலத்தை எமது கட்சி பரிபூரணமாக ஆதரிக்கின்றது. அத்துடன் இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக இருப்பவர்கள் நியாயமாகச் சிந்தித்து, இந்த மக்களுக்கு நன்மை கிடைக்க உதவ வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர் பெரும்பான்மைச் சமூகமும், சிறுபான்மைச் சமூகமும் ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறு கிடையாது. இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் தீர்வுத் திட்டங்களை குழப்பி வந்ததே வரலாறு. ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்ததை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த கட்சிகள் எதிர்த்தன. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுவந்ததை ஐக்கிய தேசியக் கட்சியும் அதனைச் சார்ந்தவர்களும் எதிர்த்தன. சந்திரிக்கா அம்மையார் கொண்டுவந்த தீர்வுத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி தீயிட்டுக் கொளுத்தியது. இதுவே கடந்தகால வரலாறு.

யுத்தம் தமிழ்ச் சமூகத்துக்கு ஏராளமான உயிர் அழிவுகளையும், சொத்துச் சேதங்களையும் ஏற்படுத்தியது. தமிழ் இளைஞர்கள் பலர் பலியாகினர். அதேபோன்று வடக்கு.கிழக்கிலே வாழ்ந்த ஒரே மொழி பேசிய முஸ்லிம் சமூகம், ஆயுததாரிகளின் பாதிப்புக்களுக்கு உள்ளாகியது. ஆயுததாரிகளால்  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.

இன்று வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் தமிழரசுக்கட்சி நியாயமாக நடந்துகொள்ளவில்லை. சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா போன்ற நல்ல தலைவர்கள் அந்தக் கட்சியில் உயர் பதவியில் இருக்கும்போது, அந்தக் கட்சியினூடாக பாராளுமன்றம், மாகாணசபை மற்றும் பிரதேச சபைகளுக்கு சென்றவர்கள், இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் குறிப்பாக ஒரு துண்டுக் காணியையேனும் அந்த மக்களுக்குக் கிடைப்பதற்குத் தடையாக இருக்கின்றனர், என்பதை மிகவும் வேதனையுடன் குறிப்பிட விரும்புகின்றேன். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறி வைக்கின்றேன்.

இன்று நிரந்தரத் தீர்வு ஒன்று பற்றி சிலாகிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்று இந்த நாட்டிலே தேர்தல் முறையில் மாற்றம் வர வேண்டுமென கோரி வருகின்றது. இன்னும் ஒரு கட்சி  ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து, பிரதமரின் அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. மற்றொரு சாரார் குறிப்பாக சர்வதேச நாடுகளும், வடக்கு, கிழக்கிலே பாதிக்கப்பட்டவர்களும், இந்த நாட்டிலே நிரந்தரத்தீர்வொன்று நடைமுறைப்படுத்தப் பட வேண்டுமென கோரி வருகின்றனர்.

எமது கட்சியைப் பொறுத்தவரையில், இந்த மூன்று விடயங்களும் ஒரே முறையில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீர்வொன்றே நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுக்கும் என்ற நிலைப்பாட்டிலேயும், உறுதியாக இருக்கின்றது என்பதை இந்த சபையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இதய சுத்தியுடன் பணியாற்ற வேண்டும்.

அதை விடுத்து இனவாதம், மதவாதத்தை மாறிமாறி இந்த உயர் சபையிலே பேசிப்பேசி தமது அரசியல் நலனுக்காக இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கு துணை போகாதீர்கள் என வேண்டுகின்றேன்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *