பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் ஜனாஷா எரிப்பு ஐ.நா.சபை மஹிந்தவுக்கு கடிதம்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் சடலங்களைத் தகனம் செய்யும் நடைமுறையை இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யுமென எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி மற்றும் செப்டெம்பர் மாதம் 4ம் திகதி ஆகிய தினங்களில் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களின் மூலம் நோய்த்தொற்று பரவுகை தொடர்பில் விளக்கம் அளித்துள்ளது.


இதில் சடலங்களின் ஊடாக நோய்த்தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக தெரிவித்திருந்தது.
நோய்த்தொற்றுக்களினால் உயிரிழப்போரின் சடலங்கள் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் தகனம் செய்வது வழமையான நம்பிக்கையாகும் எனினும் இதற்கு ஆதாரங்கள் கிடையாது.


சடலங்களை எரிப்பது கலாச்சார மற்றும் வளங்களின் அடிப்படையிலானது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் இறுதிக் கிரியைகள் உள்நாட்டுத் தர நிர்ணயங்களின் அடிப்படையிலும் குடும்பங்களின் விருப்புக்களிற்கு அமையவும் மேற்கொள்ள முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.


சடலங்களைக் கையாள்வது தொடர்பில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலாகும்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காமை ஒடுக்குமுறையாகும்.


உள்நாட்டிலும் உள்நாட்டுக்கு வெளியிலிருந்தும் தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமை சமூகப்பிரச்சினையாக உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான நாட்டம் இதனால் குறையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நோய்த்தொற்று பரம்பல் ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார மற்றும் அரசாங்கத் தரப்பினர் சில பிரபலியமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்பதனை தாம் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.


எவ்வாறெனினும் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமை, நோய்த்தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதாரபூர்வ பரிந்துரை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான தடையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.


இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு உச்ச அளவில் ஒத்துழைப்பினை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆர்வமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாகவும் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியா விதை வங்கிக்கு சென்ற வெளிவிவகார அமைச்சர்.

wpengine

மக்கள் விடுதலை முன்னணியின் மீட்புப் படையணியான செந்தாரகைப் படையணி மீண்டும்

wpengine

ரணில் ஆட்சியில் 30அமைச்சர்கள்! முஸ்லிம்,தமிழ் அமைச்சர்கள் நடவடிக்கை

wpengine