எங்களைவிட எண்ணிக்கையில் குறைவாகவுள்ள முஸ்லிம்களை அடக்கி ஆளமுடியாது.அவர்களை சரிசமமாக நடத்தாவிட்டால் சரியான தீர்வை எங்களால் எட்ட முடியாது என்பதை திட்டவட்டமாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கு என்பது தமிழ்பேசும் மக்களுடைய தாயக பூமி. அதில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இருப்பார்கள். அவர்கள் தொடர்பான நலன்கள் பேணி பாதுகாக்கப்பட்டு சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கென்று சிறப்பான பல விடயங்கள் இருக்கின்றன என கோரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பகுதிகளில் ஒரு நல்லாட்சியுள்ள சுயாட்சியுள்ள முஸ்லிம் பிராந்திய சபையொன்று கிடைப்பதற்கான யோசனையை முன் வைத்துள்ளோம். உலகில் இவ்வாறான பல தீர்வுகள் உள்ளன. அவர்கள் விரும்பக்கூடிய யோசனையில் நாங்கள் தலையிட முடியாது. ஆகக்கூடிய சுயாட்சியை வழங்கி அனைவருடைய பங்களிப்புடன் அந்த மக்கள் எதிர்காலத்தில் தாங்கள் ஒதுக்கப்படுகின்றோம் என நினைக்காதவாறு இதேவேளை ஒரு சட்டத்தை கொண்டு வருகின்ற பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களுடைய சம்மதமின்றி தமிழ் மாநிலத்தில் அவர்கள் முஸ்லிம்கள் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்ற சரத்து நிறைவேற்றப்பட வேண்டும். சிங்கள மக்களிடம் எவ்வாறு சம உரிமையைக் கோருகின்றோமோ அவ்வாறு எங்களைவிட எண்ணிக்கையில் குறைவாகவுள்ள முஸ்லிம்களை அடக்கி ஆளமுடியாது. அவர்களை சரிசமமாக நடத்தாவிட்டால் சரியான தீர்வை எங்களால் எட்ட முடியாது என்பதை திட்டவட்டமாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
முஸ்லிம்களுடைய பூரண சம்மதத்துடன்தான் வடகிழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலம் அமைய முடியும் எனத் தெரிந்து வைத்திருக்கின்றோம்.எதிர்காலத்தில் ஒரு துளி அளவேனும் முஸ்லிம்கள் பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு யோசனையை சிங்கள, பௌத்த பேரினவாதம் ஒரு போதும் தரப் போவதில்லை. ஆனால் ஏன் முயற்சி செய்யக்கூடாது என வெளிநாட்டவர்கள் எம்மிடம் கேட்கின்றார்கள். முயற்சி செய்கின்றோம். அது நிராகரிக்கப்படுமாக இருந்தால் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை நாடு வோம். இந்திய – இலங்கை உடன்படிக்கையில் இப்போதிருக்கின்ற அரைகுறை தீர்வான மாகாண சபையொன்று கிடைக்கப் பெற்றது.
எனவே சர்வதேச ரீதியாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பங்களிப்புடன்தான் ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமென உறுதியாக நம்புகின்றோம். எமது அரசியல் தீர்வு யோசனையில் இந்நாடுகள் அனுசரணையாளர்களாக இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.