இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். குறித்த சம்பவம் தென் கிழக்கு ஆசியாவிலே அதுவும் சிறிய அழகான இந்த நாடு ஏன் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று இன்று வரை ஒரு கேள்வியாக இருக்கின்றது என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலின் போது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையில் 7.7 வீத்தைக்கொண்ட நான்காவது நிலையில் இருக்கின்ற கத்தோலிக்க, கிறிஸ்தவ திருச்சபை இந்த உயிர்த்த ஞாயிறு அன்று குண்டு வெடிப்பில் இலக்காக்கப்பட்டது இன்று வரை புரியாத ஒரு புதிராகவே உள்ளது.
இந்த நாட்டின் கிறிஸ்தவர்கள் வேறு எந்த நாட்டிலோ அல்லது தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவோ எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள்.
அதனால் இன்று வரை ஒரு புரியாத புதிர். தென்கிழக்கு ஆசியாவிலே அதுவும் சிறிய அமைதியான ஒரு நாட்டிலே யுத்தத்தின் பின் புலத்திலே தங்களை கட்டி எழுப்புகின்ற ஒரு நாட்டிலே மிகவும் சிறுபான்மையினராக வாழ்கின்ற கிறிஸ்தவ திருச்சபை ஏன் தெரிவு செய்யப்பட்டது?
இந்த சம்பவத்தின் பின்னணியிலே பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் இந்த சம்பவத்தின் உடனடியான நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை கொழும்பு மறைமாவட்ட கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் உடனடியாக இலங்கை வாழ் மக்களுக்கும், உலகத்திற்கும் தெரியப்படுத்தினார்.
திருச்சபையின் நிலைப்பாடு என்ன என்று தெரியப்படுத்தியதினால் தான் இன்று வரை இந்த அழகிய தீவு வேறு எந்த அசம்பாவிதங்களையும் சந்திக்காமல் இருக்கின்றது.
அவருடைய நிலைப்பாடு ஆயர் அனைவருடைய நிலைப்பாடுகளும் ஒட்டு மொத்தமாக ஒன்று தான்.
பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார் ஒரு சிறிய குழுமம் பயங்கர வாதத்துடன் தொடர்புடைய குழுமம் இந்த காரியத்தை செய்ததற்காக முழு இஸ்லாமிய மக்களையும் முஸ்லிம் சமூகத்தையும் நாம் புறக்கணிக்க முடியாது. தண்டிக்க முடியாது.
அவருடைய அந்த வார்த்தை தான் இன்று வரை திருச்சபையின் நிலைப்பாடாகவும், இலங்கை முழுவதும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் வழி வகுத்துள்ளது.
காரணம் உண்டு. பேராயர் அவர்கள் ஏன் அப்படி சொன்னார்? கிறிஸ்தவ திருமறை போதிப்பது ஒன்று தான். மன்னிப்பையும், அன்பையும். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தொலைக்காட்சியூடாக இடம் பெற்ற திருப்பலி பிரசங்கத்திலே கடவுள் அன்பு மயமானவர். கடவுள் இரக்கமுள்ளவர். சிலுவையிலே தொங்கிய இயேசு எதிரிகளையும் மன்னிக்குமாறு கேட்டார்.
அது தான் கிறிஸ்தவம். அந்த மன்னிப்புதான் இன்று உலகத்திற்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அல்லது விட்டால் நமது நாட்டின் சரித்திரம் தெரியும். இந்த நாட்டிலே மதம் ரீதியாக இடம் பெற்ற வன் முறைகளையும் நாம் நன்கு அறிவோம்.
ஆனால் பேராயர் அவர்களும், நமது ஆயர் உற்பட இலங்கை ஆயர்களும் அவருடைய அந்த கூற்று, அவருடைய அந்த நிலைப்பாடு தான் இன்று முழு நாட்டையும் ஏன் அரசியல் தலைவர்களையும் வழி நடத்தி வந்துள்ளது.
இது தான் திருச்சபையின் நிலைப்பாடாக இருக்கின்றது. திருச்சபையினுள் பல கேள்விகள். கொச்சிக்கடை புனித அந்தோனியார் பல ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்து இழுக்கின்ற ஒரு புனிதர்.
கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் பேராலயம் மிகவும் பிரபல்யமான ஆலயம். புனித செபஸ்தியார் என்றாலே பலருக்கு பயம். அப்படி இருக்கத்தக்கதாக ஏன் இந்த ஆலயங்கள் தெரிவு செய்யப்பட்டன?
எனினும் இறந்தவர்களுக்கு ஆன்ம சாந்தியையும், காயப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் அவர் அளிப்பாராக என அவர் மேலும் தெரிவித்தார்.