நேற்று பாலமுனை, முல்லிமலையில் ஒரு பெரிய பிரளயமே நடந்தேறி இருந்தது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள நான்கு முஸ்லிம் பா.உறுப்பினர்களில் ஒருவர் கூட குறித்த இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து, பிரச்சினையை தீர்க்க முனையவில்லை என்பது மிகவும் கவலையான விடயம்.
இவ்வாறான பிரச்சினை தீர்வுக்கு களத்தில் தீவிரமாக செயற்படுதல் மிக அவசியமானது. சிலையை வைக்க விடாமல் தடுத்தல் பிரச்சினையை தீர்ப்பதற்கான முதற் படியாக நோக்கலாம். சிலை வைக்காமல் தடுக்க களத்தில் நின்றேயாக வேண்டும். களத்தில் என்ன வேலை என யாரும் கேட்க முடியாது.
ஒரு பா.உ குறித்த களத்தில் நின்றால் எதிராளிகளுக்கு ஒரு அச்சம் இருக்கும், எம்மவர்களுக்கு ஒரு தெம்பு கிடைக்கும். பிரச்சினை ஏதேனும் எழுந்தாலும் ஒரு பா.உ றுப்பினர் உள்ள போது, அதனை பாதுகாப்பு பிரிவினர் நோக்கும் கோணம் வேறு வகையாக இருக்கும். தற்போதுள்ள நான்கு பா.உறுப்பினர்கள் மொட்டரசின் சார்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் யாருமே களம் செல்லாமை..
- சிலை வைப்பதற்கான மறைமுக அங்கீகாரமா?
- இவ்விடயத்தில் தங்களால் முட்டி மோத முடியாது என்பதன் வெளிப்பாடா?
என்ற இரு வினாக்களுமே கேட்க சாத்தியமானவை. இவ் இரண்டு வினாக்களும் மிகவும் பாரதூரமானவைகள். இந் நான்கு பா.உறுப்பினர்களுக்கும் வாக்களித்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்த ஊர் அட்டாளைச்சேனையாகும் ( பாலமுனை, ஒலுவில் ). இதற்கு ஏதும் என்றால் நால்வரும் களத்தில் நின்றிருக்க வேண்டும்.
இது எமது பா.உறுப்பினர்களின் தற்போதைய செயற்பாடுகளை, பொடுபோக்கை ஊகிக்க போதுமான விடயமாகும். இதுவே சாணக்கியனுக்கும் இவ் விடயத்திற்கும் தொடர்பிருந்தால், ஓடி வந்து விளையாடியிருப்பார்கள். இவர்களை நம்பி எமது சமூகத்தை கொடுத்தால் என்னவாகும்?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.