முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நோயாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மயக்க மருந்து வழங்கப்படாமையால் நோயாளர்களை சிகிச்சைகளுக்காக வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கான மருத்துவ தேவையை வழங்க வேண்டிய ஒரு வைத்தியசாலையாக காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள் தினமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வைத்தியசாலையில் மேற்கொள்ள கூடிய சத்திர சிகிச்சை நோயாளிகளுக்கான மயக்க மருந்துகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக நோயாளிகளுக்கான மயக்க மருந்து வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
இதனால் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் குறித்த நோயாளர்களை வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் நிலைமை காணப்படுகின்றது.
அதாவது சாதாரணமாக குறித்த வைத்தியசாலையில் செய்யவேண்டிய சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
நோயாளிகள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா அல்லது யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றமையினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
குறித்த நோயாளிகள் சார்ந்த குடும்பங்களும் அந்த நோயாளிகளுக்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பெருந்தொகையான பணத்தை செலவிட்டு வவுனியா மற்றும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய ஒரு நிலைமை காணப்படுகின்றது.
எனவே இந்த வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறித்த குறைப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய உரிய தரப்புக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ள பல தடவைகள் முயற்சிகள் மேற்கொண்ட போதும் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.