(சுஐப் எம். காசிம்)
தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இற்றைவரை இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார்? என மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பினார்.
முல்லைத்தீவில் நேற்று முன்தினம் (29.07.2017) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் கூறியதாவது,
‘வன்னி அமைச்சரின் பிழையான அணுகுமுறைகளாலும், அவரது நடவடிக்கைகளாலும் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ளது. தமிழ்க்கட்சிகளுடன் தமக்கிருக்கும் உறவையும் நெருக்கத்தையும் பயன்படுத்தி, முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகளை பவ்வியமாகவும், பக்குவமாகவும் கையாண்டு இதனை நாங்கள் வென்றெடுப்போம்’ இவ்வாறு கூறிய அந்த அமைச்சரான முஸ்லிம் கட்சியின் தலைவா,; முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்காகவும் வவுனியாவில் பரிந்து பேசினார். அமைச்சரின் இந்தப் பேச்சை இலத்திரனியல் ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து ஒளிபரப்பின. அச்சு ஊடகங்கள் கொட்டை எழுத்துக்களில் இந்தச் செய்திகளை வெளியிட்டன.
கடந்த சில வருடங்களுக்க முன்னர் முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை அந்த மக்கள் துப்பரவு செய்ய முற்பட்ட போது, டோசருக்கு முன்னே படுத்து அந்தக் காணியை துப்பரவு செய்யும் முயற்சியை சிலர் தடுத்து நிறுத்தினர். அந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கழிந்து, அந்தப் பிரதேசத்துக்கு அண்டிய பகுதிகளில் அமைந்திருந்த 4 அல்லது 5கொட்டில்களை சிலர் தாங்களாகவே தீயிட்டு கொளுத்திவிட்டு ரிஷாட்டின் ஆதரவாளர்கள் தமிழ் மக்களின் கொட்டில்களை எரித்து விட்டனர் என்று ஊடகங்களை வரவழைத்து கூப்பாடு போட்டனர். இந்தத் திட்டமிட்ட சதி வேலைகள் ஊடகங்களில் பூதாகரப்படுத்தப்பட்டன. ஊடக ஆதிக்கத்தை என்னென்ன வகையில், எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் பயன்படுத்தி, நொந்து போய் இருக்கும் வடக்கு முஸ்லிம்களையும் அவர்களை மீள்குடியேற்ற முயற்சிக்கும் என்னையும் தூற்றுகின்றார்கள், கேவலப்படுத்துகின்றார்கள்.
கொட்டில் எரிப்பு சம்பவம் நடைபெற்று சில வாரங்கள் கழிந்த பின்னர் அமைச்சர் றவூப் ஹக்கீம் முல்லைத்தீவுக்கு வந்தார். தமிழ் – முஸ்லிம் உறவை ரிஷாட் சீரழிப்பதாக குற்றச்சாட்டிய அவர் எதுவுமே அறியாதவர் போல பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து என்னை இகழ்ந்தார். இந்த விடயங்களை நாசுக்காக செய்யவேண்டுமென அறிவுரை கூறியதுடன், என்னையும் தாழ்த்தி அவர் பேசிய பேச்சுக்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமைகொடுத்தன.
கடந்த 4வருட காலமாக நாங்கள் மிகவும் அமைதியாக இருந்தோம். தமிழ்த் தலைமைகளும், வடமாகாணசபையும் முஸ்லிம்களின் மீள்குடீயேற்றத்தில் உருப்படியாக ஏதாவது செய்யவேண்டுமென எதிர்பார்த்திருந்தோம்.
காணிக்கச்சேரிகள் மட்டுமே நடைபெற்றதேயொழிய மீள்குடியேற வந்தவர்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு எந்த வசதிகள் தானும் செய்து கொடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் அகதி முஸலிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு மிகவும் நேர்மையாகக் கேட்டோம். தமிழரசுக் கட்சி, தமிழ்க் கூட்டமைப்பு, வடமாகாணசபை ஆகியவற்றின் தலைமைகளுடனும் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு கோரினோம். அரசாங்க அதிபரிடம் வேண்டினோம். பிரதேச செயலாளரிடம் எமது கோரிக்கையை எடுத்துரைத்தோம்.
மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் பலதடவை இந்த மக்களுக்கு கருணைகாட்டுமாறும், நியாயம் வழங்குமாறும் வேண்டினோம்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்கேற்ற வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அமரர் அண்ணன் ஜெகநாதன், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன் உட்பட மனித நேயம் படைத்த அரசியல் முக்கியஸ்தர்கள் எதமு நியாயங்களை ஏற்று எமக்காக பரிந்து பேசினர். ஆமரர் அன்டனி ஜெகநாதன் தமது சொந்த காணியை கூட எமது குடியேற்றத் தேவைக்காக தருவதற்கு முன்வந்தார் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியுனர்வுடன் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
எனினும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன்
னேற்றங்கள் எதுவுமே இல்லாத நிலையில், அரசின் துணையுடன் மீள்குடியேற்ற செயலணியை அமைத்தோம். பாதிக்கப்பட்ட, நீண்டகால அகதிகளாக இருக்கும் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் மீள்குடியேற்றத்தில் உதவுவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்தச் செயலணியையும் முளையிலேயே கிள்ளி எறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் நான் இங்கு வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் அண்மையில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, முதமைச்சர் விக்னேஸ்வரன் தான் அவசரமாக செல்ல வேண்டும் என்று கூறி எழுந்த போது, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்த்துவிட்டுச் செல்லுங்கள் என்று நான் கூறினேன். அப்போது அரசியல்வாதி ஒருவர் மிகவும் மோசமாக அங்கே நடந்துகொண்டார். முல்லைத்தீவு முஸ்லிம்களை ‘வந்தான் வரத்தான்களாக’ கருதி வரலாறுகளைத் திரிபுபடுத்தினாhர். நாகரிகம் இல்லாமல் அவர் நடந்துகொண்டார். முறிப்பிலே யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீதும் வீண்பழி போட்டார். அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆளை ஆள் விமர்சிக்கும் சொற்போர்க் களமாக மாறியது.
இந்தத் துர்ப்பாக்கிய சம்பவம் முடிந்து ஒரு சில தினங்களில் வவுனியாவிற்கு வந்த அதே முஸ்லிம் கட்சியின் தலைவர், மீண்டும் அதே பழைய பல்லவியையே பாடினார். தமிழ் – முஸ்லிம் உறவு கெட்டுப்போவதாக தெரிவித்தார். என் மீது மட்டுமே தனது சுட்டுவிரலை நீட்டினார். முதமைச்சர் விக்னேஸ்வரனுடனும் தமிழ் அரசியல்வாதிகளுடனும் வன்னி அமைச்சர் மோதுவதன் மூலம் பத்திரிகைகளில் செய்தி வரவேண்டுமென அவர் துடிக்கின்றாரெனக் கூறிய முஸ்லிம் கட்சியின் தலைவர், அவ்வாறான கருத்துக்களை வவுனியா கூட்டங்களில் தான் வெளிப்படுத்தியதன் மூலம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும்; அவர் ஓர் இடத்தை பிடித்துக்கொண்டார்.
இந்தச் சம்பவங்களெல்லாம் நடந்தமை ஒருபுறமிருக்க எனக்கெதிராவும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராகவும் யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்களில் வரவழைக்கப்பட்ட சில ஆட்கள் திட்டமிட்டு முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். என்னை மிக மோசமாக ஏசினர். கூழாமுறிப்பு மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில் அவர்கள் இந்தத் திட்டமிட்ட நாடகத்தை நடாத்திமுடித்தனர். அது மட்டுமன்றி, இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் மீள்குடியேற்ற செயலணியை இல்லாமலாக்குவதே அவர்களின் உள்நோக்கமாக இருந்தது.
குற்றம் இழைக்காது தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமூகம் மோசமாக வீழ்ந்து கிடக்கின்றது. அது மீண்டு; எழுந்து செல்வதென்பது, இலகுவான காரியமல்ல. சொந்த இடத்தில் வாழ நினைக்கும் அவர்களை, இந்தச் சதிகாரர்கள் ஏன் நோகடிக்கின்றார்களோ தெரிவில்லை. கூழாங்குளத்தில் யாரோ வெட்டிய மரத்தை முஸ்லிம்கள் வெட்டியதாக கூப்பாடு போட்டு ஊடகங்களில் ஊதி பெருப்பிக்கின்றீர்ளே! மனச்சட்சி இருந்தால் நீங்கள் இவ்வாறு செய்வீர்களா? மரக்கூட்டுத்தாபனம் அங்கிருந்த மரங்களை வெட்டி அதனை எடுத்துச் சென்றதாக நாங்கள் இப்போது அறிகின்றோம். மனிதாபிமானத்தோடும், மனச்சாட்சியுடனும் நடந்து கொள்ளுங்கள். மனிதர்களை மனிதர்களாக பார்க்கப் பழகிக்கொள்ளுங்கள்.
என்னைப் பொறுத்தவரையில் அரசியல் வாழ்வில் எத்தனையோ சவால்களுக்கு நான் முகங்கொடுத்து வருகின்றேன். நான் கற்பனையில் கூட நினைத்திராத சில விடயங்களை என்னுடன் சம்பந்தப்படுத்தி என்னை வேண்டுமென்றே தூஷிக்கின்றார்கள். என்னை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென சதி செய்கின்றார்கள். எனது உயிருக்கு உலைவைக்க வேண்டுமென முடியுமென நினைக்கின்றார்கள். எனினும் இறைவனுக்கு பொருத்தமான வகையில் அவனை மட்டும் திருப்திப்படுத்தி கொண்டு என்பணிகளை செய்கின்றேன்.
அமைச்சர் பதவியை சுமந்து கொண்டிருகின்றேன் என்பதற்காக நியாயம் தவறி சமூகங்களைக் காட்டிக்கொடுத்து, நான் போதும் செயற்பட்டதுமில்லை, செயற்படப் போவதுமில்லை. தலைவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசியலை நான் என்றுமே செய்யமாட்டேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.